சேலம்:சேலம் மாநகராட்சியில் அன்றாடம் சாலையோரங்களில் காய்கறிகள் உள்ளிட்டவைகளை விற்று வாழ்வாதாரத்தை ஈட்டிவரும் சாலையோர வியாபாரிகளிடம் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கட்டாய சுங்க வரி வசூலிப்பாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், கட்டணம் செலுத்தியவர்களுக்கு மாநகராட்சியின் அடையாளம் இல்லாத ரசீதுகளையும் வழங்கிய நிலையில், இது குறித்து உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
சேலம் மாநகரில் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஆற்றங்கரையோர பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகள் கடைகள் அமைத்து, காய்கறிகள், கீரைகள், பழங்கள், பூக்கள் விற்பனை செய்து வருகின்றனர்.
இவர்களிடம் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் உரிய முத்திரை இல்லாமல் ரூ.50 முதல் ரூ.1,100 வரை தினந்தோறும் சிலர் கட்டாய சுங்கவரி வசூலில் ஈடுபடுவதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று சாலையோர வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதன் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு கூறப்படுகிறது. இது தொடர்பாக நமது ஈடிவி பாரத்திடம் பேசிய, சேலம் மாவட்ட ஏஐடியுசி சாலையோர வியாபாரி தொழிலாளர்கள் சங்கத்தின் (AITUC) மாநில பொதுச் செயலாளர் ஷாநவாஸ் கான் கூறுகையில், 'சேலம் மாநகராட்சி அம்மாபேட்டை மண்டலம் மற்றும் சூரமங்கலம் மண்டல பகுதிகளில் 400-க்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகள் உள்ளனர்.
இவர்கள் அன்றாடம் விவசாயிகளிடமிருந்து காய்கறிகள், பழங்கள், கீரைகள், பூக்கள் ஆகியவற்றை கொள்முதல் செய்து சிறிய அளவில் தள்ளுவண்டி மற்றும் தரையில் கடைகள் அமைத்து வியாபாரம் செய்து தங்களது வாழ்வாதாரத்தை ஈட்டி வருகின்றனர். அம்மாபேட்டை மண்டலத்தை பொறுத்தவரையில் ராஜ கணபதி தேர் முட்டி பகுதியில் இருந்து வாசவி மஹால் இறக்கம் வரையிலும் மாநகராட்சி சார்பில் குத்தகை விடப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த பகுதிகளில் சாலையோர வியாபாரிகள் கடைகள் அமைத்து வணிகம் செய்து கொள்ளலாம் என மாநகராட்சி தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.