சேலம் சட்டக் கல்லூரியில் பயிலும் ஆதிதிராவிடர் மாணவர்களுக்காக ரூ. 51 லட்சத்தில் விடுதி ஒன்று கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்த விடுதியை பயன்பாட்டிற்கு கொண்டு வர மாணவர்களும், சமூக ஆர்வலர்களும் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
சேலம் மாவட்டம் சின்னகொல்லப்பட்டி கிராமத்தில் கடந்த 1984ஆம் ஆண்டு தனியார் சட்டக்கல்லூரி தொடங்கப்பட்டது. இந்தக் கல்லூரியில் அரசு இட ஒதுக்கீட்டில் படிக்கும் பட்டியலின பிரிவினைச் சேர்ந்த மாணவர்கள் சேலம் நகரப்பகுதிகளில் வாடகைக்கு அறை எடுத்து தங்கி படித்து வந்தனர். இந்நிலையில் பட்டியலின மாணவர்கள் தங்கி படிக்கும் வகையில், அரசு இலவச விடுதி ஒன்றை கட்டித் தர வேண்டுமென்று சட்டக்கல்லூரி மாணவர் அமைப்பினர் 15 ஆண்டுகளாக தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.
இதற்கு பலனாக கடந்த 2005ஆம் ஆண்டு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகமான 'தாட்கோ' சார்பில் விடுதி கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது . இதைத்தொடர்ந்து ஏற்காடு மலை அடிவாரப் பகுதியான கொண்டப்பநாயக்கன்பட்டி பகுதியில் ரூ. 51 லட்சம் மதிப்பில் 2011ஆம் ஆண்டு விடுதி கட்டுவதற்கான பணிகள் தொடங்கி 2012-13ஆம் கல்வியாண்டில் பணிகள் முடிக்கப்பட்டன.