சேலம் மாவட்டம் பள்ளப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன் (எ) தமிழ்ச்செல்வன். இவர் நேற்று (ஏப். 13) காலை செவ்வாய்பேட்டை பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, அவருக்கு முன்பு சென்ற இருசக்கர வாகனம் மீது மோதி, நிலைதடுமாறி கீழே விழுந்தார்.
இந்நிலையில், எதிர்த் திசையில் வந்த காவல் துறை வாகனம் தமிழ்ச்செல்வன் மீது ஏறி இறங்கியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதையடுத்து, காவல் துறையினர் தமிழ்ச்செல்வனின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்விற்காக சேலம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்நிலையில், தமிழ்ச்செல்வன் உயிரிழந்ததை அறிந்த உறவினர்கள் காவல் துறை ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அன்னதானப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அந்தப் புகாரை காவல் துறையினர் ஏற்க மறுப்புத் தெரிவித்துள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த உறவினர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவலறிந்து அங்கு வந்த காவல் துறையினர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நிவாரணம் பெற்றுத் தருவதாக உறுதியளித்தையடுத்து, மறியலைக் கைவிட்டு அங்கிருந்து கலைந்துசென்றனர்.
பின்னர் தமிழ்ச்செல்வனின் சகோதரர் சரவணன் செய்தியாளர்களைச் சந்தித்துக் கூறுகையில், "எனது அண்ணன், முதலமைச்சர் பாதுகாப்பிற்குச் சென்ற வாகனம் மோதி உயிரிழந்துவிட்டார். இந்த விபத்து குறித்து காவல் துறையினரிடம் புகார் கொடுத்தால் அலுவலர்கள் வாங்க மறுத்ததால் சாலை மறியலில் ஈடுபட்டோம்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும். உரிய நிவாரணம் கிடைக்க வேண்டும்" என்றார். இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:திண்டுக்கலில் பால் வியாபாரி வெட்டி படுகொலை!