தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சேலத்தில் 80 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்ட அபூர்வ பறவை! - பெயின்டட் சாண்டுகிரவுஸ்

சேலம் மாவட்டத்தில் இந்தியக் கல்கவுதாரி என்னும் அரிய வகைப் பறவை 80 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

சேலத்தில் 80 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்ட அபூர்வ பறவை
சேலத்தில் 80 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்ட அபூர்வ பறவை

By

Published : Nov 8, 2022, 4:24 PM IST

சேலம் மாவட்டத்தில் இந்தியக் கல்கவுதாரி (பெயின்டட் சாண்டுகிரவுஸ்) என்னும் அரிய வகைப் பறவை இருப்பது பறவைகள் கண்காணிப்புப்பணியின்போது கண்டுபிடிக்கப்பட்டது. இது பறவையியல் ஆர்வலர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக சேலம் பறவையியல் கழக இயக்குநர் கணேஷ்வர் கூறுகையில், 'சேலம் பறவையியல் கழகத்தைச் சேர்ந்த ஆர்வலர்கள் ராகவ் மற்றும் புகைப்படக்கலைஞர் வெங்கட்ராமன் ஆகியோருடன் நானும், மேட்டூர் தாலுகாவில் உள்ள நீதிபுரம் ஏரியில் பறவைகளைக் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தோம்.

அப்போது இதுவரை பார்த்திராத சந்தன நிறமுடைய நான்கு பறவைகளைக்கண்டோம். பைனாகுலர் வழியாகப் பார்க்கும்போது அவை மிக அரிதாகவே தென்படக்கூடிய இந்தியக் கல் கவுதாரிகள் என்று உறுதி செய்து படங்கள் எடுத்தோம். தமிழ்நாட்டில் இரண்டு வகையான கல் கவுதாரிகள் காணப்படுகின்றன. அதில் செவ்வயிற்றுக் கல் கவுதாரி ஓரளவிற்குப் பரவலாகத்தென்படுகிறது.

ஆனால், தற்போது சேலத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள இந்தியக் கல்கவுதாரி மிகவும் அரிதான பறவையாகும். வறண்ட திறந்தவெளி நிலங்கள், கற்கள் நிறைந்த புல்வெளிகள் மற்றும் புதர்காடுகளில் கல் கவுதாரிகள் வசிக்கும். எனவே, கால்நடை மேய்ப்போரும் உள்ளூர் மக்களும் இந்தப் பறவையைப் பார்த்திருக்கும் வாய்ப்புகள் உண்டு.

சேலத்தில் 80 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்ட அபூர்வ பறவை

ஆனால், அவை எங்கும் ஆவணப்படுத்தப்படவில்லை. கடைசியாக 1942ஆம் ஆண்டு ஆப்ரே பக்ஸ்ட்டன் என்பவர் சேலத்தில் இந்தியக் கல் கவுதாரிகளைப் பார்த்ததாக தனது குறிப்புகளில் எழுதியுள்ளார்.

அதன்பிறகு 80 ஆண்டுகள் கழித்து தற்போது தான் சேலத்தில் புகைப்படத்தோடு பதிவு செய்யப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தைத் தவிர, இப்பறவை தமிழ்நாட்டில் நீலகிரி, ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் மட்டுமே தென்படுகிறது. இது பறவைகள் ஆர்வலர்களான எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது' என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஹெல்மெட் அணிந்தால் சாக்லேட்; அணியாவிட்டால் ரூ.1000 அபராதம் - நடைமுறைக்கு வந்த மோட்டார் சட்டம்

ABOUT THE AUTHOR

...view details