பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று (ஜூலை 13) வெளியிட்ட ட்விட்டர் பதிவில், 'தமிழ்நாட்டில் மதுக்கடைகளின் மது விற்பனை நேரத்தை மாற்றியமைக்கும் திட்டம் இல்லை; 90 மிலி மதுப்புட்டிகளை அறிமுகம் செய்வது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று மதுவிலக்குத் துறை அமைச்சர் முத்துசாமி அறிவித்திருக்கிறார். தமிழ்நாட்டின் சமூகச் சூழலை சீரழிக்கும் இந்த இரு திட்டங்கள் குறித்து நான் கடுமையாக கண்டனங்களைத் தெரிவித்திருந்தேன். அதைத்தொடர்ந்து சமூக ஊடகங்களில் அரசின் திட்டத்திற்கு எதிராக கடும் கொந்தளிப்பு ஏற்பட்டது. அவற்றுக்கு அஞ்சி தான் அமைச்சர் முத்துசாமி அவரது முடிவை திரும்பப் பெற்றுள்ளார். எது எப்படியாக இருந்தாலும் அரசின் புதிய முடிவு வரவேற்கத்தக்கது.
அரசின் நேரத்தை இதற்கெல்லாம் செலவிடுவதா?:மக்கள் நலனில் மட்டும் அக்கறை செலுத்த வேண்டிய அரசு, மது குடிப்பவர்கள் எல்லா நேரத்திலும் மது கிடைக்காமல் எப்படியெல்லாம் அவதிப்படுகிறார்கள்? 90 மிலி மது கிடைக்காததால் பலரும் அதிக அளவு மதுவை வாங்கி, பகிர்ந்து கொள்ள கூட்டாளி கிடைக்காமல் எவ்வளவு நேரம் காத்துக்கிடக்கிறார்கள்? என்பன போன்ற சமூக முக்கியத்துவம் வாய்ந்த வினாக்களுக்கு விடை காண்பதற்காக தமிழ்நாடு அரசு அதன் பொன்னான நேரத்தையும், பணத்தையும் செலவிட்டு கணக்கெடுப்பு நடத்தியுள்ளது என்று அமைச்சர் ஒருவரே கூறுவதைத் தான் பொறுப்புள்ள குடிமகனாக தாங்கிக் கொள்ள முடியவில்லை. இனி இத்தகைய தேவையற்ற வேலைகளுக்கு அரசு இடமளிக்கக் கூடாது.
மதுப்பழக்கத்தால் ஆண்மை இழப்பு:மதுவால் தமிழ்நாடு மிகவும் மோசமான சீரழிவுகளை சந்தித்துக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் நடைபெறும் சாலை விபத்துகளில் மதுவின் பங்களிப்பு எத்தனை விழுக்காடு? மதுவால் ஒவ்வொரு ஆண்டும் அதிகரிக்கும் இளம் கைம்பெண்களின் எண்ணிக்கை எவ்வளவு? மதுப்பழக்கத்தால் ஆண்மையை இழக்கும் இளைஞர்கள் எவ்வளவு பேர்? மதுப்பழக்கத்தால் ஒவ்வொரு ஆண்டும் நிகழும் மணவிலக்குகள் எத்தனை?