சேலம்:தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கத்தின் மாநிலத் தலைவராக இருப்பவர் இளங்கோவன். இவர் மீது 2014-2020 வரை ரூ.3.78 கோடி வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக, லஞ்ச ஒழிப்புத்துறையினர் முதல் தகவல் அறிக்கையில் கூறியுள்ளனர். இதையடுத்து இளங்கோவன் மற்றும் அவரது மகன் பிரவீன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதற்கிடையில், சேலம் மாவட்டம் புத்திரக் கவுண்டன் பாளையத்தில் உள்ள இளங்கோவன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு அலுவலர்கள், இன்று (அக்.22) காலை முதல் சோதனை நடத்திவருகின்றனர். அவரது இல்லம், அலுவலகம் என சென்னை, திருச்சி, சேலம் உள்ளிட்ட 26 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. இளங்கோவன் சேலம் புறநகர் மாவட்ட அதிமுக ஜெயலலிதா பேரவை தலைவராக உள்ளார்.
ஆதரவாளர், ஆடிட்டர் வீடுகளில் ரெய்டு
இந்த நிலையில் சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டணம் அடுத்த மின்னாம்பள்ளி கிராமத்திலுள்ள இளங்கோவனின் ஆதரவாளர் ராஜராஜசோழனின் இல்லத்திலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். ராஜராஜசோழன் சேலம் புறநகர் அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளராகவும், மாவட்ட கவுன்சிலராகவும் உள்ளார்.
மேலும் இளங்கோவனின் ஆடிட்டர் ஜெயபிரகாஷின் சேலம் மரவனேரி பகுதியிலுள்ள வீட்டிலும் காலை முதல் லஞ்ச ஒழிப்பு காவல்துறையின்ர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
மாநில கூட்டுறவு சங்கத்தின் தலைவராகவும், சேலம் புறநகர் மாவட்ட அதிமுக ஜெயலலிதா பேரவை தலைவராகவும் உள்ள இளங்கோவன் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்காமானவர் என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க: அமித் ஷாவுடன் சந்திப்பா? டெல்லி செல்கிறார் தமிழ்நாடு ஆளுநர்!