பல்வேறு நாடுகளில் செயல்பட்டு வரும் பிரபல கே.எம்.பி கிரானைட் நிறுவனம் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு கோயம்புத்தூரில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில், நிறுவன வளர்ச்சிக்காக கிரானைட் நிறுவனத்தை அடமானம் வைத்து 40 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளனர். அதில் ரூ.24 கோடி பணத்தை திருப்பிச் செலுத்திய கேஎம்பி நிறுவனம், மீதமுள்ள தொகையை திருப்பிச் செலுத்த இயலாமல் காலம் தாழ்த்தி வந்துள்ளது.
கடனை திருப்பி செலுத்தாத பிரபல கிரானைட் நிறுவனத்தின் சொத்துகள் ஜப்தி! - பஞ்சாப் நேஷனல் வங்கி
சேலம்: பஞ்சாப் நேஷனல் வங்கியில் வாங்கிய கடனை திரும்ப செலுத்தாத கே.எம்.பி கிரானைட் நிறுவனத்தின் சொத்துகள் ஜப்தி செய்யப்பட்டது.
இதனையடுத்து பஞ்சாப் நேஷனல் வங்கி அலுவலர்கள் நிறுவன உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். ஆனாலும் கடனை கே.எம்.பி. நிறுவனம் முழுமையாக செலுத்தவில்லை. இதனால் சேலம் நீதிமன்றத்தை அணுகிய பஞ்சாப் நேஷனல் வங்கி கே.எம்.பி கிரானைட் நிறுவனத்தை ஜப்தி செய்யும் அனுமதியை பெற்றது.
இதையடுத்து இன்று சேலம் ஐந்து ரோடு பகுதியில் உள்ள கே.எம்.பி நிறுவனத்தை பஞ்சாப் நேஷனல் வங்கியின் அலுவலர்கள் ஜப்தி செய்ய முயன்றபோது, இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து சேலம் பள்ளப்பட்டி போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று கிரானைட் நிறுவன உரிமையாளரிடம் தெரிவித்ததையடுத்து, வங்கி அலுவலர்கள் நிறுவனத்தின் சொத்துக்களை ஜப்தி செய்தனர்.