பெங்களூரு புகழேந்தி பேட்டி சேலம்:முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 7ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, சேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் அமைந்துள்ள ஜெயலலிதாவின் சிலைக்கு பெங்களூரு புகழேந்தி மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு எல்லோரும் இணைந்துதான் போயஸ் கார்டன் சென்று சசிகலாவைச் சந்தித்து, நீங்கள்தான் பொதுச் செயலாளர் ஆக வேண்டும் என்று காலில் விழுந்து கேட்டோம். அதன் பிறகு நீதிமன்றம் சென்று, பொதுக்குழு கூட்டி சசிகலாவை எடப்பாடி பழனிசாமி நீக்கினார்.
தற்பொழுது சசிகலா உச்ச நீதிமன்றம் மேல்முறையீட்டிற்குச் செல்லலாம், செல்வார் என்று நான் எதிர்பார்க்கிறேன். அதிமுகவில் 2 கோடிக்கு மேல் தொண்டர்கள் உள்ளார்கள் என்று எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். அத்தனை தொண்டரும் அவருக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்று அவரால் நிரூபிக்க முடியுமா?
வரும் நாடாளுமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் கூட்டணி உருவாக வேண்டும் என்பதுதான் எங்களுடைய ஆசை. நாடாளுமன்றத் தேர்தலில் கட்டாயம் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் 40 தொகுதிகளிலும் போட்டியிடுவோம். மேலும், ஆர்கே நகர் தொகுதி போல இருவருக்குமே சுயாட்சி சின்னம் வழங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
தற்போது சென்னையில் பெய்த மழை மிகவும் வேதனையாக உள்ளது. சென்னை மொத்தமும் தண்ணீரில் மிதப்பதற்கு முழு காரணம் எடப்பாடி பழனிசாமிதான். எடப்பாடி அப்போது முதலமைச்சராக இருந்த பொழுது, ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, இனி ஒரு சொட்டு தண்ணீர் கூட சென்னையில் தேங்காது என்றார். அதன் பிறகு ஆட்சிக்கு வந்த திமுக அரசு, கடந்த ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தது.
ஆனால் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்பொழுது திமுக அரசு நான்காயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து அந்தப் பணிகளை மேற்கொண்டது. அப்பொழுதும் சென்னை மக்கள் மீளா துயரத்தில் உள்ளனர். தற்பொழுது சென்னையின் இந்த சீரழிவிற்கு காரணம் எடப்பாடி பழனிசாமிதான்" என்று தெரிவித்தார்.
இதேபோல, அதிமுக சேலம் மாநகர மாவட்டச் செயலாளர் வெங்கடாசலம் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுகவினர் ஜெயலலிதாவின் சிலைக்கு மலர் மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். மேலும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சேலம் புறநகர் மாவட்டச் செயலாளர் எஸ்.கே.செல்வம் தலைமையில் 50க்கும் மேற்பட்ட அமமுகவினர் ஜெயலலிதாவின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
இதையும் படிங்க: "அத்தியாவசிய பொருட்கள், காய்கறிகள் தட்டுபாடு இல்லை.. மக்கள் இருப்பு வைக்க வேண்டாம்" - தலைமை செயலாளர்!