சேலம் மாநகராட்சி மரவனேரி பகுதியில் காக்கையன் சுடுகாடு இருந்துவருகிறது. இதில் எரியூட்டப்படும் பிரேதங்களில் இருந்து வெளிவரும் புகையானது ராட்சத உயர சிம்னி வழியாக வெளியேற்றப்பட்டுகிறது.
ஆனால், கடந்த சில ஆண்டுகளாக சிம்னியின் பல்வேறு இடங்களில் சேதமடைந்து புகை அதன் வழியாக வெளியேறுகிறது. இதனால் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் துர்நாற்றம் வீசுவதாகவும், புகையின் சம்பல்கள் ஆங்காங்கே சிதறி கிடப்பதாகவும் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் எந்த பலனும் இல்லை எனவும் தெரிவித்தனர்.
இந்நிலையில், பழுதடைந்துள்ள சிம்னியை சரி செய்யாத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மயானத்தின் நுழையிலுக்கு பூட்டு போட முயற்சித்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த சேலம் அஸ்தம்பட்டி காவல் துறையினர் நிகழ்விடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால், அதில் உடன்பாடு எட்டப்படாததையடுத்து, மாநகராட்சி அலுவலர்கள் நிகழ்விடத்திற்கு வந்து மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
சீலநாயக்கன்பட்டியில் புதிதாக இடுகாடு கட்டும் பணிகள் முடிந்து, அது செயல்பாட்டுக்கு வர இருப்பதாகவும், அதுவரை இந்த சுடுகாட்டை பயன்படுத்தமாட்டோம் எனவும் அதிகாரிகள் உறுதி அளித்ததை அடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.