2016ஆம் ஆண்டு சீர்மிகு நகரத் திட்டத்தில் 2ஆம் கட்டமாக சேலம் மாநகராட்சி தேர்வுசெய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து விரிவான திட்ட அறிக்கைகள் தயார் செய்யப்பட்டு, மொத்தம் ரூ.945.15 கோடி மதிப்பீட்டில் சீர்மிகு நகரத் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
இந்நிலையில் சீர்மிகு நகரங்களில் வசிக்கக்கூடிய பொதுமக்களின் வாழ்க்கை திறன், சமூக மேம்பாடு, குழந்தைகளுக்கான கல்வித் தரம், சுகாதார மேம்பாடு, தூய்மையான பராமரிப்பு, திடக்கழிவு மேலாண்மை, பாதுகாக்கப்பட்ட குடிநீர் போன்ற வசதிகளை மேம்படுத்துவதற்கு ஏதுவாக, மத்திய அரசின் வீட்டு வசதி, நகர்புற வளர்ச்சி அமைச்சகத்தின் சார்பில் 'எனது நகரம் எனது பெருமை' என்பதன் அடிப்படையில் எளிதான வாழ்க்கை குறித்த கருத்துக் கணக்கெடுப்பு இன்று தொடங்கி வருகின்ற 29ஆம் தேதி வரை நடைபெறும்.
சேலம் மாநகராட்சி வெளியிட்டுள்ள விளம்பரம் பொதுமக்கள் தங்களது கருத்துக்களை பதிவுசெய்யும் வகையில் கியூ ஆர் கோடுடன் விளம்பரங்கள் வெளியிடப்படும். இந்த கியூ ஆர் கோடுகளை ஸ்கேன் செய்தால், மாநகராட்சி இணையதள பக்கத்துடன் இணைப்பு ஏற்படுத்தப்படும். இவ்வினையதள பக்கத்தில் பெண்களின் பாதுகாப்பு, பொழுதுபோக்கு அம்சங்கள், மின்சார வசதிகள் குறித்து மொத்தம் 24 கேள்விகள் கேட்கப்படும். இதற்கான பதில்களை பொதுமக்கள் இணைய தளத்தில் வழங்கப்பட்டுள்ள விவரங்களிலிருந்து தேர்வுசெய்து பதிவிட வேண்டும்.
இவ்வாறு பொதுமக்களிடமிருந்து பெறப்படும் கருத்துக்களைக் கொண்டு சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீர்மிகு நகர திட்டப் பணிகளை மேம்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அனைத்து தரப்பினரும் இந்தக் கருத்துக் கணக்கெடுப்பில் பங்குகொண்டு தங்கள் கருத்துகளை பதிவுசெய்ய வேண்டும் என மாநகராட்சி ஆணையாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: ரூ.790 கோடிக்கு ஸ்மார்ட் சிட்டி பணிகள் தொடக்கம்!