சேலம் அம்மாப்பேட்டை மண்டலத்துக்கு உட்பட்ட பச்சப்பட்டி பகுதியில் சுமார் 750 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளி வளாகத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிக்கும் பணியை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
இப்பணிகளினால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் இந்த துர்நாற்றத்தின் காரணமாக அப்பகுதியைச் சேர்ந்த பலருக்கும் பல்வேறு உடல் தொற்றுகள் ஏற்படுகிறது என அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
மேலும் மாநகராட்சி நிர்வாகம் குடியிருப்பு பகுதியில் குப்பைகளை தரம் பிரிக்கும் பணியை உடனடியாக கைவிட வேண்டும் எனவும், குப்பைகளை தரம் பிரிக்கும் பணியை மாநகராட்சிக்கு வெளியே மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி அப்பகுதியைச் சேர்ந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் அம்மாபேட்டை பிரதான சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சாலை மறியல் போராட்டம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த பிறகு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டுச் சென்றனர்.
மேலும் அதிகாரிகள் அளித்த வாக்குறுதியின்படி விரைந்து நடவடிக்கை எடுக்கவில்லை எனில் அடுத்த கட்ட போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.