தமிழ்நாடு

tamil nadu

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 2, 2023, 10:06 PM IST

ETV Bharat / state

நவீன தொழில்நுட்பங்கள் மூலம் விளைபொருட்களை ஏற்றுமதி செய்யலாம் - சேலம் வடக்க்எம்.எல்.ஏ இராஜேந்திரன்

விவசாயிகள் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தங்களது விளைபொருட்களை ஏற்றுமதி செய்து அதிக இலாபம் பெறலாம் என வேளாண் விளைப்பொருட்களுக்கான ஏற்றுமதி மேம்பாட்டுக் கருத்தரங்கில் சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் இராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

வேளாண் விளைப்பொருட்களுக்கான ஏற்றுமதி மேம்பாட்டுக் கருத்தரங்கம்
வேளாண் விளைப்பொருட்களுக்கான ஏற்றுமதி மேம்பாட்டுக் கருத்தரங்கம்

சேலம்: சேலம் மாவட்டம், நெய்காரப்பட்டியில் சேலம், நாமக்கல், ஈரோடு ஆகிய மாவட்ட விவசாயிகளுக்கான வேளாண் விளைப்பொருட்கள் ஏற்றுமதி கருத்தரங்கினை சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் மற்றும் சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் இராஜேந்திரன் இன்று (நவ.02) தொடங்கி வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் பேசுகையில்; "சேலம், நாமக்கல், ஈரோடு ஆகிய மாவட்ட விவசாயிகள் தங்கள் உற்பத்தி பொருட்களுக்கு அதிக லாபம் பெறுவதற்கான சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும் வகையில் இந்த கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விவசாயிகள் பொருளாதாரம் ரீதியாக மேம்படத் தமிழக முதலமைச்சர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். விவசாயிகள் உற்பத்தி செய்யக்கூடிய விளைபொருட்களுக்கு உலக அளவில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. மேலும், இந்த கருத்தரங்கில் வேளாண் வணிக வாய்ப்புகள், ஏற்றுமதி நடைமுறைகள், உணவு பாதுகாப்பு உரிமம் பெறுதல், ஏற்றுமதி இடர்பாடு மற்றும் காப்பீடு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் துறை வல்லுநர்கள் தொழில்நுட்ப உரையினை வழங்கவுள்ளார்கள். அதனால் இதனை விவசாயிகள் முறையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்" என்றார்.

இதனைத் தொடர்ந்து சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் இரா.இராஜேந்திரன் பேசுகையில்; "சேலம், ஈரோடு மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களிலிருந்து வெளிநாடுகளுக்கு மஞ்சள், மரவள்ளி, முட்டை, மாம்பழம், அரிசி உள்ளிட்ட பல பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. குறிப்பாக மஞ்சள் - மலேசியா, அமெரிக்கா, பங்களாதேஷ், ஜெர்மன், ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதேபோல் முட்டை - குவைத், பஹ்ரைன், ஈரான், ஓமன், ஈராக் உள்ளிட்ட நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

மேலும், வங்கிக் கணக்கு, பேன் (PAN) கார்டு பெறுதல், இறக்குமதி ஏற்றுமதி குறியீட்டு எண் பெறுதல், சந்தை தேர்வு, மாதிரிகள் அனுப்புதல், விலை நிர்ணயம் என விவசாயிகளுக்கு வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை பணிகளை எளிதாக்கிக் கொடுக்கின்றனர். இது போன்ற கருத்தரங்குகளை விவசாயிகள் தங்கள் வாழ்வின் முன்னேற்றத்திற்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்" என கூறினார்.

இந்த கருத்தரங்கு நிகழ்ச்சியில் அட்மா குழு தலைவர் வெண்ணிலா சேகர், வேளாண்மை இணை இயக்குநர் சிங்காரம், சேலம் வேளாண் விற்பனைக்குழு துணை இயக்குநர் பா.கண்ணன், நாமக்கல் வேளாண் வணிகத்துறை துணை இயக்குநர் அ.நாசர், ஈரோடு வேளாண் வணிகத்துறை துணை இயக்குநர் மகாதேவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:"2026ல் கப்பு முக்கியம் பிகிலு" - நடிகர் விஜய்! சட்டமன்ற தேர்தலா? உலக கோப்பை கால்பந்தா?

ABOUT THE AUTHOR

...view details