சேலம்:பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம் எழுப்பிய கருப்பு ஆடை சர்ச்சை தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அறிக்கை ஒன்றை இன்று (ஜூன் 27) வெளியிட்டுள்ளது. அறிக்கையின் வாயிலாக கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாலு கூறியதாவது, "பல்கலைக்கழகத்தின் செயல்பாடுகளை பல்கலைக்கழக ஆட்சி மன்றக் குழுதான் தீர்மானிக்க முடியும். காவல்துறை அறிவுறுத்தலின் அடிப்படையில் பல்கலைக் கழக அதிகாரி சுற்றறிக்கை அனுப்புவது பல்கலைக் கழகத்தின் ஆட்சி மன்றக் குழுவை சிறுமைப்படுத்தும் செயலாகும்.
'நிறம்' என்ற அறிவியலின் வரையறைக்குள் வெள்ளையும், கருப்பும் வராது. கருத்தியல் புரிதலின் அடிப்படையில் வெள்ளையும் கருப்பும் வெவ்வேறு பொருளில் பார்க்கப்படுகிறது. கருப்புத் தோல் கொண்டவர்களை நாகரீகப் படுத்தும் பொறுப்பு, வெள்ளைத் தோல் கொண்டவர்களுக்கு இருப்பதாக ஐரோப்பியர்கள் கூறிக் கொண்டதை வரலாற்றில் படிக்கின்றோம்.
ஐரோப்பிய காலனி மக்களின் நிறவெறி கருத்தியல்தான் தென் ஆப்பிரிக்காவில் திரு. மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி என்ற வழக்குரைஞரை ரயில் பெட்டியில் இருந்து கீழே இறக்கிவிட்டது. அந்த சம்பவமே வெள்ளையரை எதிர்த்து காந்தியடிகள் போராட்டம் நடத்த காரணமாக அமைந்தது. வெள்ளை நிறவெறிக்கு எதிரான போராட்டமே "மகாத்மா" என்ற புகழை காந்தியடிகளுக்கு பெற்றுத்தந்தது.
ஒரு குழுவில் கருத்தொற்றுமை இல்லாத நபரை "கருப்பு ஆடு" என்று அழைப்பது நிறவெறியின் வெளிப்பாடே. ஒருவரை கரும்புள்ளி அல்லது கருப்பு ஆடு என்று சொல்வது சாதிய கட்டமைப்பு கொண்ட சமூகத்தில், குறிப்பிட்ட நபரை சிறுமைப் படுத்துவதற்கு பயன்படுத்தும் சொல்லாடல்.