பழங்குடியின மாணவர்களுக்கு போஸ்ட் மெட்ரிக்குலேஷன் உதவி தொகை வழங்கி வந்த நிலையில், மத்திய அரசு இந்தத் திட்டத்தை நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதனை கண்டித்து அண்மையில் திமுக பொருளாளர் டி.ஆர். பாலு அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
அதில், 76 ஆண்டுகளாக இருக்கும் போஸ்ட் மெட்ரிக்குலேஷன் உதவித் தொகையை நிறுத்திட முயற்சிக்கும் பாஜகவின் சூழ்ச்சி முறியடிக்கப்பட வேண்டும். இதற்கு பிரதமர் மோடி தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.
இந்நிலையில், போஸ்ட் மெட்ரிக்குலேஷன் உதவித் தொகை நிறுத்த முயற்சிக்கும் மத்திய அரசைக் கண்டித்து, பல்வேறு இடங்களில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போராட்டம் நடத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு போஸ்ட் மெட்ரிக்குலேஷன் உதவித்தொகையை வழங்கிட வேண்டும், மனுஸ்மிருதியை மறைமுகமாக நடைமுறைப்படுத்த முயற்சிக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விசிகவினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
சேலம் மாவட்ட செயலாளர் ஜெயச்சந்திரன் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் ஆர்ப்பாட்டம் செய்தவர்களை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.
இதையும் படிங்க:ஈடிவி பாரத் செய்தி எதிரொலி: மரங்களை பாதுகாக்க தொடங்கப்பட்ட பரப்புரை