தமிழ்நாடு முழுவதும் காலியாக உள்ள இரண்டாம் நிலை காவலர்களுக்கான உடற்தகுதி தேர்வுகள் நேற்று தொடங்கி ஒன்பதாம் தேதி வரை நடைபெறுகிறது.
சேலம்:
சேலம் மாவட்டத்திலுள்ள குமாரசாமிபட்டி ஆயுதப்படை மைதானத்தில் தொடங்கிய உடற்தகுதி தேர்வில் சேலம், நாமக்கல் மாவட்டங்களை சார்ந்த இளைஞர்கள் பங்கேற்றுள்ளனர். அழைப்பாணைகள் சரிபார்க்கப்பட்டு உயரம், மார்பளவு, ஓட்டம், மற்றும் உடற்தகுதி தேர்வு நடைபெற்றது. மைதானத்தில் தவறுகள் நடைபெறாமல் இருக்க டிஐஜி பிரதீப் குமார் தலைமையிலான குழுவினர் காணொலி பதிவுகள் மூலம் கண்காணித்து வருகின்றனர். சேலத்தில் நான்கு நாட்கள் நடைபெறும் உடற்தகுதி தேர்வில் 2,762 பேர் பங்கேற்கின்றனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் இருந்து இரண்டாம் நிலை காவலர்கள் மற்றும் சிறை காவலர்கள், தீயணைப்பு வீரர்கள் பதவிகளுக்கான எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு விழுப்புரம் காகுப்பம் ஆயுதப்படை வளாகத்தில் உடற்தகுதி தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வில் ஆண்கள், பெண்கள் என மொத்தம் 3,502 பேரும், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 2,282 பேரும் பங்கேற்க உள்ளனர்.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டத்தில் தொடங்கிய தமிழ்நாடு சீருடைப் பணியாளர் பணிக்கான உடல் தகுதித் தேர்வில் 644 பெண்கள் உள்பட 2,229 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்வுகளை கண்காணிக்க காவலர் பயிற்சி பள்ளி டிஐஜி சத்யபிரியா மற்றும் சிறைத் துறை டிஐஜி பழனி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் சேதுபதி விளையாட்டரங்கில் நடைபெற்றுவருகிறது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இளைஞர்கள் ஆர்வமுடன் பங்கேற்றுள்ளனர். இதில் ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களிலிருந்து 1000 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் 917 பேர் மட்டுமே பங்கேற்றுள்ளனர். ராமநாதபுரம் சரக டிஐஜி ரூபேஷ்குமார் மீனா மற்றும் ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா மேற்பார்வையில் இந்தத் தேர்வுகள் நடைபெறுகிறது.