சேலம்:பெரியார் பல்கலைக்கழகத்தில் பூட்டர் பவுண்டேசன் என்ற பெயரில் தனியார் நிறுவனம் தொடங்கப்பட்டது. இது தொடர்பாக எழுந்த புகாரின் பேரில் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் கைது செய்யப்பட்டு நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய பதிவாளர் (பொறுப்பு) தங்கவேல் உட்பட 3 பேர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இதற்கிடையே, கடந்த மாதம் 27ஆம் தேதி பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் வீடு, அலுவலகம், உள்பட 6 இடங்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில், பல்வேறு முக்கிய ஆவணங்களை போலீசார் கைப்பற்றியதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று முன்தினம் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சேலம் பெரியார் பல்கலைக்கழகத்திற்கு வருகை புரிந்தார். அவரை துணை வேந்தர் ஜெகநாதன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். தொடர்ந்து, ஆளுநர் ஆர்.என்.ரவி அவருடன் ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பு, சுமார் 25 நிமிடம் தனிப்பட்ட முறையில் நடந்ததாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, சிண்டிகேட் கூட்ட அரங்கில் பல்கலைக்கழக துறைத்தலைவர்களுடன், ஆளுநர் ரவி ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து, அவர் கோவைக்குப் புறப்பட்டுச் சென்றார். முன்னதாக முறைகேடு புகாரில் கைதான துணை வேந்தர் ஜெகநாதனை, ஆளுநர் சந்திப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பு சார்பில் 150க்கும் மேற்பட்டோர் கையில் கருப்பு கொடிகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.