நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் அருள்ஜோதி. விவசாயியான இவரிடம் அதே ஊரைச் சேர்ந்த 7 பேர் கொண்ட கும்பல் நன்கு பழகி வெளிநாட்டில் உள்ள கிறிஸ்தவ அமைப்புகளில் இருந்து தங்களுக்கு 300 கோடி ரூபாய் பரிசு விழுந்துள்ளதாகவும் அந்தப் பணத்தை தங்களுக்கும் பங்கிட்டுத் தருவதாகவும்; பணம் கிடைப்பதற்கு ஆவணங்கள் தேவைப்படுவதால் பணம் செலவாகும் எனவும் கூறி அருள் ஜோதியிடம் 40 லட்சம் ரூபாயை வாங்கி உள்ளனர்.
இதற்கிடையே முன்விரோதம் காரணமாக அருள்ஜோதி கொலை செய்யப்படுகிறார். இதனைத் தொடர்ந்து அருள்ஜோதியின் உறவினரான விவசாயி பழனிவேல் என்பவரிடம் அருள்ஜோதியின் நண்பர்கள் எனக் கூறி அறிமுகமாகும் அந்தக் கும்பல், அவரிடமும் முன்பு போன்றே 300 கோடி பரிசுத்தொகை விழுந்துள்ளது எனவும், அதை பங்கீட்டுத் தருவதற்குக் கடந்த சில மாதங்களாக 60 லட்சம் ரூபாயைப் பெற்றுள்ளனர்.
அதைத் தொடர்ந்து பழனிவேலிடம் பரிசுத் தொகை வந்துவிட்டதாகவும் அதனை வழங்குவதற்கு மிகப்பெரிய விழா நடத்த வேண்டும் என்றும் அதற்கு பத்து லட்ச ரூபாய் தேவைப்படுகிறது எனவும் அந்த கும்பல் கூறியுள்ளது. இதனால் சந்தேகமடைந்த விவசாயி பழனிவேல் சேலம் காவல் துறையிடம் புகார் அளித்துள்ளார்.