சேலம்:மேட்டூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த சதாசிவம் பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில் அவரது மகன் சங்கர், மனைவி பேபி, மகள் கலைவாணி ஆகியோர் மீது வரதட்சணை கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால், பாமக எம்எல்ஏ தனது குடும்பத்துடன் தலைமறைவானதாக தகவல் வெளியாகி உள்ளது.
எம்.எல்.ஏ சதாசிவத்தின் மகன் சங்கருக்கும், சேலம் சர்க்கார் கொல்லப்பட்டி பகுதியை சேர்ந்த மனோவியா என்ற பெண்ணிற்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்காக பெண் வீட்டார் ரூ.5 கோடி ரூபாய் பணம், ரூ.25 லட்சம் மதிப்பிலான சொகுசு கார், 200 பவுன் நகை ஆகியவற்றை வரதட்சணையாக கொடுத்து திருமணத்தை பிரமாண்டமாக நடத்தியதாக கூறப்படுகிறது.
திருமணமான சில மாதங்களிலேயே சட்டமன்ற உறுப்பினர் சதாசிவத்தின் மகன் சங்கர், பல பெண்களுடன் தொடர்பில் இருப்பது தெரிய வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவிக்குள் பல்வேறு பிரச்சனைகள் வர ஆரம்பித்தவுடன், சங்கர், “நான் இப்படித்தான் நீ வேண்டுமென்றால் உங்கள் வீட்டிற்கு சென்று விடு” என கூறி தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து இச்சம்பவத்தை பெரிதுபடுத்தாமல் மன வேதனையுடன் சங்கருடன், மனோவியா ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளார். ஆனால் நாளுக்கு நாள் சங்கரின் நடவடிக்கை, பெண்களை வீட்டுக்கு அழைத்து வரும் வரை வளர்ந்து சென்றது. மேலும் மனோவியாவிடம் அவ்வப்போது நகை, பணம் கேட்டு தொடர்ந்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
சங்கரின் மனைவி இது தொடர்பாக சட்டமன்ற உறுப்பினரும், மாமனாருமான சதாசிவத்திடம் தெரிவித்துள்ளார். ஆனால் அவர் அதனை ஏதும் பெரிதுபடுத்தாமல் அப்படியே விட்டுவிட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் மனோவியா வீட்டிலிருந்து புறப்பட்டு சர்க்கார் கொல்லப்பட்டியில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கே திரும்பிச் சென்றார்.
தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தாய் தந்தையிடம் கூறிய மனோவியா சேலம் மாநகர் சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வரதட்சணை கொடுமை சம்பந்தமான புகாரை கொடுத்துள்ளார். இது குறித்து பாமக சட்டமன்ற உறுப்பினர் மகன் சங்கர் மீது வழக்கு பதிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் வழக்கு விசாரணைக்கு நேரில் வராமல் சங்கர் போக்கு காட்டி வந்ததாக சொல்லப்படுகிறது.