சேலம் மாவட்டம் ஓமலூரில் இன்று பாமகவின் ஒருங்கிணைந்த மாவட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பாமக மாநில துணைப் பொதுச்செயலாளர் கண்ணையன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், பாமக தலைவர் ஜி.கே.மணி கலந்துகொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "தமிழ்நாட்டில் 5, 8ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதுள்ளது. அது டாக்டர் ராமதாசுக்கும், கிராமப்புற ஏழை மாணவர்களுக்கும் கிடைத்த வெற்றி. காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்திருப்பது வரவேற்புக்குரியது. அதனை தமிழ்நாடு அரசு மத்திய அரசு ஒப்புதலுடன் சட்டமாக்க வேண்டும்.
கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில், சேலம் மாவட்டம் தலைவாசலில் மிகப்பெரிய கால்நடை ஆராய்ச்சி நிலையம் தொடங்கியுள்ள நிலையில், அதைப்போல் தமிழ்நாடு முழுவதும் கால்நடை ஆராய்ச்சி நிலையங்கள் அரசு தொடங்க வேண்டும். தமிழ்நாட்டில் மிகப்பெரிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ள நிலையில், சேலம், திருவண்ணாமலை, கடலூர், திருவள்ளூர், கோவை மாவட்டத்தினை நிர்வாக வசதிக்காகவும், அரசின் நலத்திட்டங்கள் விரைவாக பொதுமக்களை சென்றடையும் வகையிலும் உடனடியாக பிரிக்க அரசு முன்வர வேண்டும்.
பாமக தலைவர் ஜி.கே.மணி பேசுகையில் தமிழ்நாட்டில் அனைத்துப் பகுதிகளிலும் நீராதாரம் நிலைக்க, காவிரி – கோதாவரி இணைப்புத் திட்டத்தை மத்திய அரசு உடனடியாக தொடங்க வேண்டும். பாமகவின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று மேட்டூர் அணை உபரிநீரைக் கொண்டு 100 ஏரிகளை நிரப்பும் திட்டத்தை அறிவித்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி. அத்திட்டத்துடன் காவிரியுடன் சேலம் மாவட்ட கிளை நதிகளான சரபங்கா, திருமணிமுத்தாறு, வசிஷ்ட நதிகளை இணைக்கும் திட்டத்தையும் அரசு செயல்படுத்த வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க:தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் - பாமக தீர்மானம்!