சென்னை: இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், "சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் 2023-24ஆம் கல்வியாண்டில் பி.டெக் (இம்மர்சிவ் தொழில்நுட்பம்) என்ற புதிய பாடப்பிரிவு அறிமுகம் செய்யப்படவிருப்பதாக விளம்பரங்கள் செய்யப்பட்டு வருகின்றன. உரிய ஒழுங்குமுறை அமைப்புகளிடமிருந்து எந்த அனுமதியும் பெறப்படாமல், தனியார் மூலம் நடத்தப்படும் இத்தகைய படிப்புகள் மாணவர்களின் எதிர்காலத்தை சீரழித்து விடுமோ? என்ற அச்சத்தை அளிக்கிறது.
சேலம் பெரியார் பல்கலைக்கழகமும், ஸ்கோபிக் எஜுடெக் என்ற தனியார் நிறுவனமும் இணைந்து இந்த 4 ஆண்டு தொழில்நுட்ப படிப்பை வழங்கவிருக்கின்றன. இப்படிப்பை படித்தால் வேலைவாய்ப்பு உறுதி என்றும், 2030-ஆம் ஆண்டுக்குள் 2.36 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக இருப்பதாகவும் கவர்ச்சியான விளம்பரங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இம்மெர்சிவ் தொழில்நுட்பம் என்பது நான்காம் தொழில்நுட்ப புரட்சியின் ஓர் உறுப்பு என்பதும், இப்படிப்பை படித்தவர்களுக்கு அதிக தேவை இருக்கலாம் என்பதும் உண்மை தான்.
ஆனால், இத்தகையப் படிப்பை வழங்க பெரியார் பல்கலைக்கழகத்திற்கு தகுதி உண்டா? இந்தப் படிப்புக்கு அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளதா? இந்தப் படிப்பு பட்டமேற்படிப்புக்கும், வேலைவாய்ப்புக்கும் தகுதியானது என்று ஒழுங்குமுறை அமைப்புகளால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதா? என்பன உள்ளிட்ட வினாக்களுக்கு விடை அளிக்காமல் இந்தப் படிப்பை வழங்க பெரியார் பல்கலை. முன்வந்திருப்பது மாணவர்களுக்கு இழைக்கப்படும் இரண்டகமும், குற்றமும் ஆகும்.
முதற்கட்டமாக, தமிழ்நாடு அரசு உயர்கல்விக்கான கொள்கையை தெளிவாக வகுத்திருக்கிறது. தமிழக அரசு கொள்கையின் அடிப்படையில் சேலம் பெரியார் பல்கலைக்கழகம் கலை மற்றும் அறிவியல் கல்வியை மட்டும் வழங்கும் கல்வி நிறுவனம் ஆகும். கலை மற்றும் அறிவியல் பல்கலைக்கழகத்தால் பி.டெக் எனப் படும் தொழில்நுட்பக் கல்வியை வழங்க முடியாது. தமிழ்நாட்டில் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி வழங்குவதற்காகவே அண்ணா பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், அப்பல்கலைக்கழகம் மட்டுமே பொறியியல் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளை கற்பிக்க முடியும். பெரியார் பல்கலைக்கழகத்திற்கு தொழில்நுட்ப கல்வி வழங்கும் தகுதி இல்லை என்பதால், அதனால் வழங்கப்படும் பி.டெக் பட்டம் செல்லாது.
இரண்டாவதாக, அனைத்து வகையான பொறியியல் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளுக்கும் ஏ.ஐ.சி.டி.இ எனப்படும் அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவின் ஓப்புதல் பெறப்பட வேண்டும். ஆனால், இந்தப் படிப்புக்கு அத்தகைய ஒப்புதல் எதையும் தொழில்நுட்பக் கல்விக் குழுவிடமிருந்து பெரியார் பல்கலை. பெறவில்லை. அதுமட்டுமின்றி, பல்கலைக்கழகத்தின் ஆட்சிக்குழு, கல்வி நிலைக்குழு ஆகியவற்றின் அனுமதி கூற பெறப்படவில்லை என்று தெரிகிறது. பல்கலைக்கழக அமைப்புகள், தொழில்நுட்பக் கல்விக் குழு ஆகியவற்றின் ஒப்புதல் பெறப்படாத எந்த படிப்பும் சட்டத்திற்கு எதிரான படிப்பாகவே பார்க்கப்படும்.