சேலம் மாவட்டம், சூரமங்கலம் பகுதியில் சேலம் மேற்குத் தொகுதி வேட்பாளர் இரா.அருளை ஆதரித்து அன்புமணி ராமதாஸ் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
“சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை கொண்டுவந்துள்ளார். விவசாயியான அவர், மீண்டும் முதலமைச்சராக வேண்டும். தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலானது விவசாயிக்கும் அரசியல் வியாபாரிக்கும் இடையே நடைபெறும் போட்டியாகும். சமூக நீதி, சமத்துவம் அடிப்படையில் அமைந்தது அதிமுக, பாமக கூட்டணி.
அன்புமணி ராமதாஸ் சேலத்தில் பரப்புரை முதலமைச்சரின் தாயைப் பற்றி திமுக மக்களவை உறுப்பினர் ஆ.ராசா மிக மோசமாக தரம் தாழ்ந்து பேசியுள்ளார். திமுக கூட்டணிக் கட்சியில் உள்ள தலைவர்கள் எவரும் வாய் திறக்காமல் அமைதியாக உள்ளனர். அப்படியானால் பெண்ணுரிமை பற்றி பேசுவதெல்லாம் வெறும் வசனமா? ஆ.ராசாவைப் போன்று யாராவது பெண்களை இழிவுபடுத்தி பாமகவில் பேசியிருந்தால் அவருக்கு உதை கொடுத்து கட்சியை விட்டு நீக்கியிருப்பேன்.
திமுக ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்காது. 10 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாமல் இருக்கின்றனர். திமுக ஆட்சிக்கு வந்தால் நில அபகரிப்பு, கட்டப்பஞ்சாயத்துதான் நடக்கும். இப்போதே தொழிலதிபர்களை மிரட்டத் தொடங்கிவிட்டனர். திமுக ஆட்சிக்கு வந்தால் யாரும் நிம்மதியாக தொழில் செய்ய முடியாது” எனத் தெரிவித்தார்.