சேலம் மாவட்டம் தாதகாப்பட்டி பகுதியில் அழகு நிலையம் நடத்துவதாகக் கூறி அங்கு வரும், பெண்களை மிரட்டி ஆபாசப்படம் எடுத்த புகாரில் மூன்று பேர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த வழக்கு குறித்து விசாரணை நடத்திய, சேலம் டவுன் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றிய 14 காவலர்களும் தற்போது தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. பரிசோதனை முடிவு வெளிவந்த பிறகு காவலர்களில் யாருக்கேனும் கரோனா தொற்று உள்ளதா என்பது தெரியவரும் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.