சேலம் அடுத்த உடையாப்பட்டி அருகே உள்ளது தாதம்பட்டி காலனி. இங்கு திலீப் என்பவர் நடத்திவந்த கள்ளத்தனமான மதுக்கடைக்கு, கக்கன் காலனியைச் சேர்ந்த சதீஷ் மது வாங்கச் சென்றுள்ளார். அப்போது ரூ. 130 விலையுள்ள மது பாட்டிலுக்கு ரூ. 100 மட்டுமே தருவதாகக் கூறி சதீஷ் திலீப்பிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த திலீப் 10 பேர் கொண்ட கும்பலுடன் சதீஷ் வீட்டிற்குச் சென்று அவரை கடுமையாக தாக்கியுள்ளார். இந்தத் தாக்குதலில் சதீஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சதீஷ் தாயாரும் இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்துள்ளார். தற்போது அவர் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றார்.