சேலம்: சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் இன்று பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில், பல்கலைக்கழக ஆசிரியர் நியமனத்தில் முறைகேடுகள் ஊழல்கள், பெண் பணியாளர்கள் பாலியல் ரீதியாக அவமதிக்கப்படுவது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளைத் தெரிவித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
மேலும் பல்கலைக்கழக துணைவேந்தர், பதிவாளர் உள்ளிட்ட நிர்வாகிகளைக் கண்டித்தும் அவர்களின் முறைகேடுகளை விசாரித்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கத் தமிழக அரசு முன் வர வேண்டும் என்று கோரிக்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இது தொடர்பாகச் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர்கள் சங்கத்தின் சட்ட ஆலோசகர் இளங்கோ கூறுகையில், “பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் பதிவாளர் பணி நீக்கம் செய்ய வேண்டும்.தமிழக அரசு பெரியார் பல்கலைக்கழகத்தின் முறைகேடுகளை உடனடியாக விசாரிக்க வேண்டும். முறைகேடு செயலில் ஈடுபட்ட நபர்களைப் பணி நீக்கம் செய்து தமிழக அரசு விசாரணையை மேற்கொள்ள வேண்டும். ஓதுவாராக பணிபுரிந்த ஒருவரைத் தமிழ்த் துறை பேராசிரியராகப் பணி நியமனம் செய்ததை ரத்து செய்ய வேண்டும். பெண் பணியாளர்களை இழிவு படுத்தும் செயலில் ஈடுபடும் பெரியார் பல்கலைக்கழக நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.