சேலம்:வருவாய் ஈட்டும் வகையில் கல்வி அறக்கட்டளை துவங்கியதற்காக கைது செய்யப்பட்ட பெரியார் பல்கலை துணைவேந்தர் ஜெகநாதன், நேற்று (டிச.26) இரவு சேலம் குற்றவியல் நடுவர் இரண்டாவது அமர்வு நீதிபதி தினேஷ் குமார் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார்.
இதையடுத்து, போலீசார் மற்றும் துணைவேந்தர் தரப்பு வழக்கறிஞர்களின் வாதங்களை கேட்ட நீதிபதி, துணைவேந்தர் ஜெகநாதனுக்கு 7 நாட்கள் சூரமங்கலம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
அதன்படி, ஜெகநாதன் சேலம் சூரமங்கலம் காவல் உதவி ஆணையாளர் அலுவலகத்தில், இன்று (டிச.27) நேரில் ஆஜராகி கையெழுத்திட்டுச் சென்றார். அப்போது காவல்துறையின் அனுமதியின்றி வெளியூருக்கு செல்லக்கூடாது என்றும், இந்த வழக்கு தொடர்பாக எந்த நேரத்தில் அழைத்தாலும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் போலீசார் அறிவுறுத்தி அனுப்பினர்.
பின்னணி என்ன?சேலம் அருகே கருப்பூரில் பெரியார் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக ஜெகநாதன் கடந்த 2021ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், பல்கலைக்கழக தொழிலாளர் சங்க சட்ட ஆலோசகர் இளங்கோவன் என்பவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு கருப்பூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்து இருந்தார்.
அந்த புகாரில், பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன், பதிவாளர் (பொறுப்பு) தங்கவேல், இணைப் பேராசிரியர் சதீஷ், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகப் பேராசிரியர் ராம் கணேஷ் ஆகிய நான்கு பேர் சேர்ந்து, பூட்டர் அறக்கட்டளை என்ற பெயரில் கல்வி நிறுவனத்தை தொடங்கி உள்ளனர்.