சேலம்:பல கட்ட போலீஸ் சோதனை நடத்தப்பட்ட பெரியார் பல்கலைக்கழக துறை சார்ந்த அலுவலகங்களில், விடுமுறை நாட்களிலும் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் ஆய்வு மேற்கொண்ட நிகழ்விற்கு, பெரியார் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவர் வைத்தியநாதன் மற்றும் செயலாளர் பிரேம் குமார் கூட்டாக செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அதில், “தன் மீது பதியப்பட்ட குற்ற வழக்கில் முதல் தகவல் அறிக்கையில் இருந்து தங்களை விடுக்க, சென்னை உயர் நீதிமன்றத்தில் பதிவாளர் பொறுப்பு தங்கவேல், இணைப் பேராசிரியர் சதீஷ் ஆகியோர் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளனர். சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தில் பூட்டர் பவுண்டேஷன் என்ற தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
அரசின் அனுமதி பெறாமலும், ஆட்சிக் குழுவின் ஒப்புதல் இல்லாமலும், அரசு பல்கலைக்கழகத்தில் தனியார் நிறுவனம் செயல்பட்டு வருவது சட்டத்திற்கு புறம்பானதாகும். சேலம் பெரியார் பல்கலைக் கழகத் தொழிலாளர் சங்கத்தின் சட்ட ஆலோசகர் இளங்கோவன் கொடுத்த புகாரின் அடிப்படையில், கருப்பூர் காவல் நிலையத்தில் துணை வேந்தர் ஜெகநாதன், பதிவாளர் தங்கவேல், இணைப் பேராசிரியராக பணியாற்றி வரும் சதிஷ் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. துணை வேந்தர் ஜெகநாதன் பிணையில் விடுதலை செய்யப்பட்ட நிலையில், பதிவாளர் மற்றும் சதிஷ் ஆகியோர் தலைமறைவாக உள்ளனர்.
இந்நிலையில், இந்த மூவரும் தங்கள் மீது உள்ள முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய வேண்டி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து உள்ளனர். துணை வேந்தர் தொடுத்துள்ள வழக்கின் விசாரணை, வரும் 18ஆம் தேதி நீதியரசர் ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வருகிறது. சேலம் காவல் துறை, துணை வேந்தருக்கு வழங்கிய பிணையை ரத்து செய்ய வேண்டி தொடுத்த வழக்கின் விசாரணை, வருகிற 19ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.