சேலம்: சேலம் மாவட்டத்தில் உள்ள பெரியார் பல்கலைக்கழகம் சார்பில் 77-வது சுதந்திர தினத்தையொட்டி, ''மகாகவி பாரதியாரும், தேசிய விடுதலைப் போராட்ட இயக்கமும்'' என்ற தலைப்பில் புத்தகக் கண்காட்சி நடைபெற்றது. இதைத் திறந்து வைத்த துணைவேந்தர் பேராசிரியர் ஜெகநாதன், தொடர்ந்து அங்கு வைக்கப்பட்டிருந்த புத்தகங்களைப் பார்வையிட்டார். தொடர்ந்து மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், மாணவர்கள் கொள்கைப் பிடிப்போடு வாழ வேண்டும் என அறிவுறுத்தினார்.
தொடர்ந்து பேசிய அவர் நாடு அடிமைப்பட்டுக் கிடந்தபோது சுதந்திரப் போராட்ட வீரர்கள் உணர்வோடு வெளி வந்து போராடினார்கள் எனவும்; தன்னலம் பாராது உழைத்திருக்கிறார்கள் எனவும் மாணவர்களுக்கு நினைவூட்டினார். மேலும் அவர்களால்தான் நாம் இன்று சுதந்திரம் பெற்று நிம்மதியாக வாழ்ந்துகொண்டு இருக்கிறோம் எனவும் ஜெகநாதன் குறிப்பிட்டார்.
மேலும், சுதந்திரத்திற்கு நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான போராட்ட வீரர்கள் பங்கேற்றுள்ள நிலையில், சேலம், தருமபுரி, நாமக்கல் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் அதிகம் அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறித்து பெரியார் பல்கலைக்கழகம் சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும், மக்கள் மத்தியிலும், மாணவர்கள் மத்தியிலும், கட்டற்ற சுதந்திரம் கிடைத்திருப்பதால் அவர்கள் சமூக வலைத்தளங்களின் பிடியில் சிக்கியுள்ளதாகவும், இளைஞர்கள் அதில் இருந்து வெளியேறி முன்னேற்றப்பாதையில் வளர வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.
அது மட்டுமின்றி, திருக்குறளை அடிப்படையாகக் கொண்டு நோய்களை எளிமையாகத் தீர்க்க முடியும் என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். புத்தகக் கண்காட்சியினை மாணவ, மாணவியர் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும்; புது புது தகவல்களைத் தெரிந்து கொள்ளும்போது நம்முடைய வாழ்வு சிறக்கும் எனவும், மாணவர்கள் சமூக வலைத்தளங்களுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை புத்தகங்களுக்கு வழங்க வேண்டும் என்றார்.