சேலம் மாநகராட்சிக்குட்பட்ட 24ஆவது வார்டில் உள்ள பிள்ளையார் நகரில் கடந்த சில நாள்களாக பெய்த மழையினால் சாலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே குண்டும் குழியுமாக இருந்த சாலை தொடர்ந்து பெய்த மழையினால் தண்ணீர் தேங்கி சேறும், சகதியுமாக மாறியுள்ளது.
இந்த சாலையை சீரமைக்கக் கோரி அப்பகுதி மக்கள் மாநகராட்சி அலுவலர்களிடம் மனுக்கள் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அப்பகுதி மக்கள் சாலையில் நடமாட முடியாமலும், இருசக்கர வாகனங்களில் செல்ல முடியாமலும் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதனால் அதிருப்தியடைந்த அப்பகுதி மக்கள், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநகர செயலாளர் ஜெகநாதன் தலைமையில், சேறும், சகதியுமாக உள்ள சாலையில் செடிகள் நடும் போராட்டம் நடத்தி தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
இது குறித்து பிள்ளையார் நகர் மக்கள் கூறுகையில், "மாநகராட்சி நிர்வாகம் சேறும், சகத்தியுமாக கிடக்கும் எங்கள் பகுதியை கண்டு கொள்வதில்லை. மேலும், குண்டும், குழியுமாக காணப்படும் சாலையை பயன்படுத்த முடியாமல் பொதுமக்கள் வீட்டினுள்ளே முடங்கியுள்ளோம். உடனடியாக பிள்ளையார் நகருக்கு புதிய சாலை அமைத்து தரவேண்டும். இல்லையென்றால் தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்துவோம்" எனத் தெரிவித்தனர்.