“எங்களின் நிலத்தை விட்டு விடுங்கள்” - ஆட்சியர் அலுவலகத்தில் பெண்கள் ஒப்பாரி வைத்து கதறல்! சேலம்:சரபங்கா உபரி நீர் திட்டத்திற்கு விளை நிலங்களை கையகப்படுத்தும் முயற்சியை கைவிட வலியுறுத்தி பெண்கள் ஆட்சியர் அலுவலகத்தின் தரையில் உருண்டு ஒப்பாரி வைத்து போராட்டம் நடத்தி மனு கொடுத்தனர்.
சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து காவிரி வழியாக கடலுக்கு செல்லும் உபரிநீரை நீரேற்று முறையில் ஏரிகளில் நிரப்பும் திட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்தது. இந்த காவிரி சரபங்கா உபரி நீர் திட்டம் கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் 100 ஏரிகள் நிரம்பி அந்த பகுதியில் உள்ள விவசாயத்திற்கு பயன்பெறும் வகையில் ஏற்பாடுகள் செயல்படுத்தப்பட்டது.
இதற்காக பணிகள் நடைபெற்று வரும் நிலையில் ஆமை வேகத்தில் ஆங்காங்கே திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக கூறப்படும் நிலையில் விவசாயிகள் அதிருப்தி அடைந்து உள்ளனர். இந்த நிலையில் சேலம் மாவட்டம் மேட்டூர் வட்டம் சூரப்பள்ளி கிராமத்தில் சரபங்கா ஆறு வழியாக, உபரி நீர் திட்டம் செயல்படுத்த, நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதையும் படிங்க: பழனியில் உணவு பாதுகாப்பு துறை அதிரடி சோதனை.. கெட்டுபோன இறைச்சிகள் பறிமுதல்!
கையகப்படுத்தும் பகுதிகளில் 400க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் மற்றும் அருந்ததியினர் குடும்பத்தினர் நீண்ட காலமாக வசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் இந்த திட்டத்திற்காக அந்த பகுதியில் உள்ள இரண்டு ஏக்கருக்கும் மேலான குடியிருப்பு மற்றும் விளைநிலங்களை கையகப்படுத்த அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.
இதனை திரும்ப பெற வலியுறுத்தி அந்த பகுதியை சேர்ந்த மக்கள் பலமுறை ஆட்சியர் அலுவலகத்திலும், வட்டாட்சியர் அலுவலகத்திலும் புகார் மனு அளித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அது குறித்து எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என சொல்லப்படுகிறது. இந்நிலையில் அந்த பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் ஆட்சியர் அலுவலகம் முன் திரண்டு தரையில் மண்டியிட்டு ஒப்பாரி வைத்தும் “எங்களின் நிலத்தை விட்டு விடுங்கள்.. திட்டத்தை ஏற்கனவே உள்ள நீரோடை வழியாக கொண்டு செல்லுங்கள்” என்று கூறி கதறி அழுது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து காவல்துறையினர் அவர்களை சமாதானம் செய்து ஆட்சியரிடம் மனு வழங்க அனுமதித்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது. இதுகுறித்து பேட்டி அளித்த மெய்யழகன் என்பவர் கூறுகையில், "சென்ற ஆட்சியின் போது நீரோடை வழியாக திட்டம் நிறைவேற்ற திட்டமிடப்பட்டு இருந்தது.
ஆனால் அப்போது இருந்த அதிமுக பிரமுகர் தற்போது பட்டியல் இனத்தவர் மற்றும் அருந்ததியர் இன மக்கள் வசிக்கும் பகுதியில் இரண்டரை கிலோ மீட்டர் சுற்றிச் செல்லும் வகையில் விளை நிலங்களை ஆக்கிரமித்து உபரி நீர் திட்டத்திற்கான பாதை அமைக்க முயற்சி எடுத்து வருகிறார். இதனை மாவட்ட நிர்வாகம் தடுத்து நிறுத்த வேண்டும்" என்று தெரிவித்தார். நிலங்களை கையகப்படுத்தும் பணியை கைவிடக்கோரி பெண்கள் கதறி அழுது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: 3 கோயில்களில் விரைவில் முழுநேர அன்னதானம் - அமைச்சர் சேகர்பாபு தகவல்!