மேட்டூர் அனல் மின் நிலையங்களிலிருந்து வெளியேறும் சாம்பல் சேலம்:மேட்டூர் அனல் மின் நிலையத்திலிருந்து வெளியேற்றப்படும் நிலக்கரி சாம்பலால் அப்பகுதி காற்று மண்டலம் முழுமையாக பாதிக்கப்பட்டு பொது மக்கள் சுவாசிக்க முடியாமல் பல்வேறு நோய்த்தொற்றுக்கு ஆளாகி அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இன்று அனல் மின் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் மாவட்டம், மேட்டூர் அனல் மின் நிலையம் இரண்டு பிரிவுகளாக செயல்பட்டு வருகின்றன. முதல் பிரிவில் தலா 210 மெகாவாட் திறன் கொண்ட நான்கு அலகுகள் மூலம் 840 மெகாவாட் மின்சாரம் நாள்தோறும் உற்பத்தி செய்யப்படுகிறது. இரண்டாவது பிரிவில் 600 மெகாவாட் திறன் கொண்ட ஒரு அலகு மூலம் 600 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இரண்டு அலகுகளிலும் நாள்தோறும் 1440 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு வழங்கப்பட்டு வருகிறது.
அனல் மின் உற்பத்தியின் போது, எரியூட்டப்படும் நிலக்கரி சாம்பல் கட்டுப்படுத்தப்படாமல், அனல் மின் நிலையத்தின் புகை போக்கி வழியாகவும், உலர் சாம்பல் வெளியேற்றப்படும் சைலோ மூலமும் வெளியேற்றப்படுவதால் காற்றில் பறக்கும் சூழல் உள்ளது. இதன் காரணமாக மேட்டூர், சின்னக்காவூர், தங்கமாபுரிபட்டணம், புதுச்சாம்பள்ளி, குஞ்சாண்டியூர் மற்றும் 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் வீசும் காற்றில், 500 அடி உயரத்திற்கு காற்று மாசு ஏற்பட்டுள்ளதாக பொது மக்கள் தொடர்ந்து குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும் மாசடைந்த காற்றால், அதை சுவாசிக்கும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாகி வருகின்றனர். பல பேருக்கு சுவாசக் கோளாறு உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதே நேரத்தில், காற்றில் பறக்கும் சாம்பல் விவசாய நிலங்களில் படிந்து, அங்கு வேளாண்மை செய்ய முடியாத சூழலும் நிலவுவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இது தொடர்பாக பலமுறை மேட்டூர் அனல் மின் நிலைய அதிகாரிகளிடம் கூறியும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் வேதனைத் தெரிவித்துள்ளனர். இதனால் இன்று காலை சின்னக்காவூர், பெரியார்நகர், தொட்டில்பட்டி , சேலம் கேம்ப், தாழையூர், தங்கமாபுரிபட்டணம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள், மேட்டூர் அனல் மின் நிலைய நுழைவாயிலில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, அனல் மின் நிலைய நிர்வாகத்தைக் கண்டித்து பொதுமக்கள் முழக்கமிட்டனர். இந்த நிலையில், மேட்டூர் எம்.எல்.ஏ சதாசிவம் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டார். இதனையடுத்து போராட்டக்காரர்களிடமும் எம்.எல்.ஏ சதாசிவத்திடமும் அனல் மின் நிலைய உயர் அதிகாரிகள் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பேச்சுவார்த்தைக்குப் பின்னர், விரைந்து இந்த பிரச்னைக்குத் தீர்வு காணுவதாக அனல் மின் நிலைய உயர் அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
இதையும் படிங்க:பொது சிவில் சட்டம்; அதிமுகவின் நிலைப்பாடு; 2019 நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையில் இருப்பது என்ன?