சேலம் அம்மாபேட்டை அருகில் உள்ள கிருஷ்ணன் புதூர் பகுதியில் விநாயகர் ஆலயம் உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு ஆலயத்திற்கு எதிரே அதே பகுதியைச் சேர்ந்த சிலர் அம்மன் சிலையை வைத்து வழிபட்டனர். பின்னர், அம்மன் சிலை வைக்கப்பட்ட இடத்தில் தகரத்தால் ஆன மேற்கூரை அமைத்தனர்.
இதனையடுத்து அந்தப் பகுதியைச் சேர்ந்த முரளி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில், தெருவில் அம்மன் சிலையை சிலர் வைத்துள்ளதாக வழக்கு தொடர்ந்தார். இதை அகற்ற வேண்டும் என மனு கொடுத்திருந்தார். இதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் கோயிலை அகற்றவும் அம்மன் சிலையை இந்து சமய அறநிலைத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கவும் உத்தரவிட்டது.
இன்று காலை சேலம் மாநகர காவல் துணை ஆணையாளர் தங்கதுரை தலைமையில், இந்து சமய அறநிலைத் துறை அலுவலர்களும் சேலம் மாநகராட்சி உதவி ஆணையாளர் கவிதா, தாசில்தார் மாதேஸ்வரன் ஆகியோர் கோயில் உள்ளப் பகுதிக்குச் சென்றனர்.