சேலம் மாநகராட்சி 3ஆவது டிவிஷன் எருமாபாளையம் அருகே உள்ள மலையடிவாரத்தில், மாநகராட்சி சார்பில் இயற்கை உரம் தயாரிக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதற்காக இன்று காலை அலுவலர்கள் சிபி சக்கரவர்த்தி, பழனிச்சாமி, அன்புச்செல்வி உள்ளிட்டோர் அங்கு சென்று நிலத்தை அளந்தனர்.
இதையறிந்த அப்பகுதி மக்கள் திரளாக வந்து நிலங்களை அளக்கக்கூடாது. இப்பகுதியில் உரம் தயாரித்தால், மாநகராட்சி லாரிகள் வந்து செல்லும். இதனால், விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், நிலத்தடி நீரும் பாதிக்கப்படும் என கூறி எதிர்ப்பு தெரிவித்தனர்.
இது குறித்து தகவலறிந்த அழகாபுரம் காவல் நிலைய ஆய்வாளர் கந்தவேல் தலைமையிலான 50க்கும் மேற்பட்ட காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
மாநகராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய பொதுமக்கள் பின்னர், பொதுமக்கள், மாநகராட்சி அலுவலர்களை கண்டித்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்பு, முட்புதர்களை அகற்றுவதற்காக சம்பவ இடத்திற்கு வந்த பொக்லைன் எந்திரத்தையும், அப்பகுதி இளைஞர்கள் திரளாக வந்து வெளியேறச் செய்தனர்.
இதையறிந்த காவல் துறையினர் அங்கு சென்று இளைஞர்களை சமாதானப்படுத்தினர். இந்த விவகாரத்தை முடிவுக்கு கொண்டுவர செய்வதறியாமல் திகைத்த மாநகராட்சி அலுவலர்கள், பொதுமக்களிடம் சென்று சேலம் மாநகராட்சியில் 12க்கும் மேற்பட்ட இடங்களில் இது போன்று உரம் தயாரிக்கப்பட்டு அதை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இதனால், எந்தப் பகுதியிலும் நிலத்தடி நீருக்கு பாதிப்பு ஏற்படவில்லை என ஆதாரங்களுடன் தெரிவித்தனர். உரம் தயாரிப்பால் இப்பகுதி மக்களுக்கும் நிலத்திற்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று நம்பிக்கை தெரிவித்த பின்னரே பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க: இயற்கையை மீட்கும் நோக்கில் விதைப்பந்துகளை உருவாக்கிய மாணவர்கள்!