சேலம்:சேலத்தில் குப்பனூர் வழியாக ஏற்காட்டிற்குச் செல்லும் வழியில் உள்ளது கொட்டசேடு. இந்தப் பகுதியில் 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாகச் சாலை வசதி செய்து தரக்கோரி அரசுக்கு பல்வேறு கோரிக்கைகளையும் போராட்டங்களையும் நடத்தி வந்த நிலையில் அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளது.
மேலும், இங்கு உள்ள கிராம மக்களுக்கு மருத்துவம், நியாயவிலைக்கடை, அத்தியாவசிய தேவைகளுக்கு 35 கிலோ மீட்டர் கடந்து செல்கின்றனர். மாணவ-மாணவிகள் நாள்தோறும் பள்ளிகளுக்கு 8 கிலோமீட்டர் நடந்து சென்று தான் பள்ளிகளுக்குச் சென்று வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று நீதிமன்ற உத்தரவுப்படி நார்த்தஞ்சேடு கிராமத்திற்குச் சாலை அமைப்பதற்கு வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் அளவிடும் பணியைத் தொடங்கினர். அப்பொழுது அருகாமையில் உள்ள செந்திட்டு, சின்னமலர், பெரியமதூர், பலகாடு, அரங்கம் உள்ளிட்ட 18 கிராமங்களுக்குச் சாலை அமைக்காமல் மாறாக ஒரு கிராமம் உள்ள பகுதிக்கும் தனியார் எஸ்டேட் உரிமையாளர்களுக்கு ஆதரவாகச் சாலை அமைக்க அளவிடும் பணி நடைபெறுவதால் ஆத்திரமடைந்த மக்கள் அளவிடும் பணியை மேற்கொள்ள விடாமல் வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.