சேலம் மாநகராட்சி 15ஆவது கோட்டத்திற்குட்பட்ட மரவனேரி அருகே உள்ள ஐஸ்வர்யா கார்டன் பகுதியில், திருமணி முத்தாறு அருகே மாநகராட்சி சார்பில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்கள் தொடக்கத்திலேயே எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு, அதன் பராமரிப்புப் பணி தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த சுத்திகரிப்பு நிலையத்தில், சேலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து சேகரிக்கப்படும் கழிவுநீர் கொண்டுவந்து கொட்டப்படுவதாகவும், கழிவுகளை முறையாக சுத்திகரிப்பு செய்யாமல் சாக்கடையில் திறந்து விடுவதாகவும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.
வாகனத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள் இதனால் அப்பகுதியில் தூர்நாற்றம் வீசுவதோடு, பெரியவர்கள், குழந்தைகள் பல்வேறு தொற்றுநோய்களுக்கு ஆளாவதாகவும் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகாரளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதும் அவர்களின் புகார்.
இந்நிலையில், இன்று காலை டாங்கர் லாரி மூலமாக கொண்டுவரப்பட்ட கழிவுநீரை அங்குள்ள சாக்கடையில் திறந்து விட முயற்சிப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள், வாகனத்தை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பொதுமக்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
செய்தியாளர்களிடம் பேசிய அப்பகுதி மக்கள் இதுகுறித்து பொதுமக்கள், இங்கு அமைக்கப்பட்டிருக்கும் சுத்தகரிப்பு நிலையம் முறையாக செயல்படுவதில்லை என்பதால், சேலம் மாநகரின் பல்வேறு பகுதிகளிலிருந்து நாள்தோறும் முப்பதுக்கும் மேற்பட்ட வாகனங்களில் கொண்டுவரப்படும் கழிவுநீர் திருமணி முத்தாறிலும், அருகே உள்ள இப்பகுதி சாக்கடையிலும் கொட்டுகின்றனர். இதனால் இப்பகுதியில் மக்கள் வசிக்க முடியாத சூழல் நிலவி வருகிறது. மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகாரளித்தும், இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறினர்.
இதையும் படிங்க: அமைச்சர் கார் மோதி விபத்து: ஒருவர் உயிரிழப்பு!