தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சேலம் அரசு மருத்துவமனை நோயாளிகள் வார்டில் இறந்தவர் உடல்.. துர்நாற்றம் வீசுவதால் தொற்று பரவும் அபாயம்! - அவசர சிகிச்சை பிரிவு

Salem govt Hospital: சேலம் அரசு மருத்துவமனையில் உயிரிழந்து பல நாட்களாகி துர்நாற்றம் வீசும் நிலையில் உள்ள உடலை அப்புறப்படுத்தாமல் நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் வார்டில் வைத்துள்ளதால் நோயாளிகள் அச்சமடைந்துள்ளனர்.

சேலம் அரசு மருத்துவமனையில் நோயாளிகள் வார்டில் வைக்கப்பட்ட இறந்தவர் உடல்
சேலம் அரசு மருத்துவமனையில் நோயாளிகள் வார்டில் வைக்கப்பட்ட இறந்தவர் உடல்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 1, 2023, 10:45 PM IST

சேலம் அரசு மருத்துவமனையில் நோயாளிகள் வார்டில் வைக்கப்பட்ட இறந்தவர் உடல்

சேலம்: சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நாள்தோறும் ஏராளமான நோயாளிகள் வருகை புரிகின்றனர். புற நோயாளிகளாகவும், உள் நோயாளிகளாகவும் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், சேலம் மாவட்டம் அருகில் உள்ள தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் மேல் சிகிச்சைக்காக இந்த மருத்துவமனை நோக்கி வருகின்றனர்.

இந்த நிலையில், சேலம் அரசு மருத்துவமனையில் உள்ள விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு பின்புறம் முதல் தளத்தில், அரை எண் 116-ல் தீவிர சிகிச்சைப் பிரிவு (விபத்து) உள்ளது. இதில் பத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இங்கு உயிரிழந்து பல நாட்கள் ஆன ஆண் நோயாளி உடலை, சிகிச்சை பெற்றுவரும் மற்ற நோயாளிகளின் அருகிலேயே படுக்கையில் வைத்துள்ளனர். அதைத் தொடர்ந்து, அந்த உயிரிழந்த நபரின் உடலிலிருந்து துர்நாற்றமும், உடல் அழுகியதால் அதிலிருந்து புழுக்களும் வெளியே வந்துள்ளது.

இதனால் அருகாமையிலிருந்த மற்ற நோயாளிகள், கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி வருவதாகக் குற்றம் சாட்டினர். தொடர்ந்து பல்வேறு நோய்த் தொற்றுக்கு ஆளாகி வருவதாகவும் வேதனை தெரிவித்தனர். இந்நிலையில், இதனால் பாதிக்கப்படும் நோயாளிகள் மற்றும் அவர்களின் உறவினர்கள், உடலை உடனே அப்புறப்படுத்துமாறு அரசு மருத்துவமனையில் உள்ள பணியாளர்களிடம் பலமுறை வலியுறுத்தியதாகத் தெரிகிறது.

அதற்கு அரசு மருத்துவமனை ஊழியர்கள், “இப்போதைக்கு அப்புறப்படுத்த முடியாது. எங்களுக்கு வேறு வேலை இல்லையா” என்று கடுமையாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து உள்ளிருக்கும் நோயாளிகளின் உறவினர்கள் புகார் தெரிவிக்கவே, அந்த உயிரிழந்த உடலை வார்டில் இருந்து வெளியே எடுத்து வந்து, கதவின் பின்புறம் ஸ்ட்ரக்சரில் துணியால் சுற்றி வைத்துள்ளனர்.

இவ்வாறு, உயிரிழந்த உடல் அகற்றப்படாமல் பல நாட்கள் ஆகியும் வார்டிலேயே உள்ள அவலம், சேலம் அரசு மருத்துவமனையில் அரங்கேறி உள்ளது. இந்த உடலை உடனடியாக அப்புறப்படுத்தி நோய்த் தொற்று ஏற்படாமல் தடுக்க வேண்டும் என்பதே அங்குச் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இதையும் படிங்க:சென்னையில் தொடரும் இடைநிலை ஆசிரியர்களின் உண்ணாவிரதப் போராட்டம்.. 140 ஆசிரியர்கள் மருத்துவமனையில் அனுமதி!

ABOUT THE AUTHOR

...view details