சேலம்:அதிமுக புறநகர் மாவட்ட கழகம் சார்பில் ஓமலூர், திண்டமங்கலம் பகுதியில் சமத்துவ பொங்கல் விழாவில் நடைபெற்றது. இந்த விழாவில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு 108 பானைகளில் வைக்கப்பட்ட பொங்கலை கண்ணணூர் மாரியம்மனுக்கு படையலிட்டு வழிபட்டார்.
பின்னர் பொதுமக்கள், கழக நிர்வாகிகள், தொண்டர்களுக்கும் பொங்கல் வழங்கி வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார். மேலும் உழவுக்கு உறுதுணையாக இருக்கும் மாடுகளுக்கும் பொங்கல் பிரசாதமாக அகத்திக்கீரை மற்றும் வாழைப்பழங்களை வழங்கினார்.
இதன் பின்னர் அவர் பேசியதாவது "தைபிறந்தால் வழிபிறக்கும் என்பது போல், இந்தாண்டு நாட்டு மக்களுக்கு நல்ல வழி பிறக்கும். இரவு, பகல், மழை வெயில் என்று பாராமல் நாட்டு மக்களுக்கு உணவளிக்கும் விசாய மக்களின் உன்னதமான நாள் தை திருநாள். இரண்டரை ஆண்டு திமுக ஆட்சியில் கொள்ளை அடித்ததுதான் சாதனை.
கொள்ளையடித்து சம்பாதித்த 30 ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை என்ன செய்வது என்று தெரியாமல் உதயநிதியும், சபரீசனும் உள்ளனர் என்று திமுக அமைச்சரே கூறி உள்ளார்.கொள்ளையடித்து ஆட்டம் போட்டவர்கள் சிறையில் உள்ளனர். இன்னும் சிலர் சிறை செல்ல உள்ளனர்.
ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி மிக மோசமான ஆட்சியாக மக்கள் எண்ணுகின்றனர். நியாய விலை கடைகளில் ஏழை மக்களுக்கு முறையான உணவு பொருட்கள் வழங்க வேண்டும். அதிமுக ஆட்சியில் கடுமயான வறட்சி நிலவியபோதும், புயல் பாதிப்பின் போது மக்களை பாதுகாத்தோம்.இன்று மிக்ஜாம் புயலில் மக்கள் கடுமையாக பாதிக்கப்படனர்.
அதிமுக ஆட்சியல் திட்டமிட்டு செயல்பட்டோம். குடிமராமத்து திட்டம் மூலம் நீர்நிலைகள் தூர்வாறி இலவசமாக வண்டல் மண் எடுத்துச் செல்ல அனுமதித்தோம். இப்போது மண் அள்ள முடியுமா? அதிமுக ஆட்சியில் மேட்டூர் அணையில் நாள் ஒன்றுக்கு 5,000 லாரிகளில் மண் அள்ளப்பட்டது. அவற்றை உரமாக விவசாயிகள் பயன்படுத்தினர்.
அதிமுக ஆட்சியில் ஓமலூர் தொகுதி முழுவதும் தரமான சாலை அமைத்து தந்தோம். தமிழகம் முழுவமும் 2 ஆயிரம் அம்மா மினி கிளினிக் திறந்தோம். அத்தனையும் நிறுத்தி விட்டனர். ஏழை மாணவர்கள் விஞ்ஞான கல்வி பெற 12,500 ரூபாய் மதிப்புள்ள மடிக்கணிணி தந்தோம், அதனையும் திமுக அரசு நிறுத்தி விட்டது. ஏழை மாணவர்களுக்கு திமுக அரசு ஒன்றும் செய்யவில்லை.
அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை நிறுத்தியதுதான் இந்த விடியா அரசின் சாதனை. விவசாயிகளுக்காக தலைவாசலில் ஆயிரம் கோடியில் ஆசியாவிலேயே பிகப்பெரிய கால்நடை பூங்கா தந்தோம். அதையும் இந்த அரசு செயல்படுத்தவில்லை. இந்த கால்நடை பூங்கா மூலம் விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் மேம்படுவார்கள், ஆனால் ஆயிரம் கோடியும் முடங்கி உள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் விடியா அரசுக்கு பாடமாக இருக்க வேண்டும். இந்த தேர்தலில் விடியா அரசை வீட்டிற்கு அனுப்ப வேண்டும். ஸ்டாலின் தமிழக முதல்வராக இருக்கலாம். சேலம் மாவட்டத்தில் 11 தொகுதியில் 10 தொகுதி அதிமுக வெற்றி பெற்றுள்ளது, அதிமுகவின் கோட்டையாக சேலம் உள்ளது.
பிப்ரவரி மாதத்தில் தேர்தல் அறிவிக்கப்படலாம். எனவே நாம் எப்போதும் தயாராக இருந்து தேர்தல் பணியை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும். தைத்திருநாளை மகிழ்ச்சியாக கொண்டாடுவது போன்று நாடாளுமன்றத் தேர்தல் வெற்றியை மகிழ்ச்சியாக கொண்டாடுவதற்கு ஒரு வாய்ப்பு வந்துள்ளது" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:குடும்பத்தாருடன் பொங்கல் கொண்டாடிய சினிமா பிரபலங்கள்… ரசிகர்களுக்கு வாழ்த்து!