சேலம் மாவட்டம் தலைவாசல் அடுத்த சிறுவாச்சூர் காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் சுப்பிரமணி (40) - செல்வி (37) தம்பதி. இவர்களின் 19 வயது மகள், ராமநாதபுரம் மாவட்டம் தஞ்சாக்கூர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித்தார்.
இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சார்ந்தவர்கள் என்பதால் பெண்ணின் பெற்றோர் திருமணத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் காதலர்கள் திருமணம் செய்துக் கொண்டனர். இதனையடுத்து நான்கு மாதங்களுக்கு முன் மகளின் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
அதற்கு நீதிமன்றம், திருமணம் செல்லும் என தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து, கடந்த ஜனவரி 21ஆம் தேதி பெற்றோரை பார்க்க மகள் வந்தார். அப்போது, அவர் கர்ப்பமாக இருப்பது பெற்றோருக்கு தெரியவந்தது. இந்நிலையில், சேலம் மாவட்டம் ஆத்தூரில் உள்ள தனியார் நர்சிங் ஹோமில் சுப்பிரமணி மற்றும் செல்வி தங்களது மகளை அழைத்துச் சென்று கருவை கலைத்தனர்.