தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மூளைச்சாவு.. 8 பேருக்கு மறுவாழ்வு அளித்த இளைஞர்; நன்றி கூறிய அமைச்சர்

சேலம் விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டது. இதனால் தமிழ்நாடு முழுவதிலும் 8 பேர் பயனடைந்துள்ளனர்.

மறுவாழ்வு அளித்த சேலம் இளைஞர்
மறுவாழ்வு அளித்த சேலம் இளைஞர்

By

Published : Dec 5, 2022, 4:27 PM IST

சேலம்: சேலம் விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த மல்லூர் பகுதியைச் சேர்ந்த முருகன், வேலாயி தம்பதியர்களின் மகன் மணிகண்டன்(26) என்பவரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மணிகண்டன் சேகோசார்வ் ஆலையில் ஒப்பந்தப் பணியாளராகப் பணியாற்றி வந்தார். இவரது தாயார் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பாகவே உயிரிழந்த நிலையில் குடும்பத்தை மணிகண்டன் தான் வழிநடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 30ஆம் தேதி மணிகண்டன் பணிமுடிந்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது லாரி மோதி விபத்துக்குள்ளானார்.

இதனால் படுகாயமடைந்த அவர், உயிருக்கு ஆபத்தான நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில், நேற்று இரவு மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்தனர்.

மேலும் உடல் உறுப்புகளை தானமாக வழங்குமாறு மருத்துவர்கள் குடும்பத்தாரிடம் பேசியுள்ளனர். அப்போது மணிகண்டனின் தந்தை மற்றும் உறவினர்கள் ஆலோசித்து மணிகண்டனின் உடல் உறுப்புகளை தானம் வழங்குவதற்கு ஒப்புதல் அளித்தனர். பிறகு மருத்துவர்கள், மணிகண்டனின் உடல் உறுப்புகளை அறுவை சிகிச்சை மூலமாக எடுத்தனர்.

இதயம், கண்கள், இதயவாழ்வு, கல்லீரல், சிறுநீரகங்கள் உள்ளிட்ட உடல் உறுப்புகள் எட்டு பேருக்கு வழங்குவதற்கு சேலம் அரசு மருத்துவமனை நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது. இதுதொடர்பான தகவலையும் அரசு மருத்துவமனை நிர்வாகம் மணிகண்டனின் தந்தை மற்றும் உறவினர்களிடம் தெரிவித்தது.

இதையடுத்து ஆம்புலன்ஸ்கள் மூலமாக சென்னைக்கு இதயம் மற்றும் நுரையீரலும், கோவைக்கு கல்லீரலும், ஈரோடு மற்றும் சேலத்திற்கு சிறுநீரகமும் உள்ளிட்ட ஒவ்வொரு உறுப்புகளும் அனுப்பி வைக்கப்பட்டது. இவை காவல்துறையினர் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது. இதனிடையே மணிகண்டனின் சகோதரி, உடல் உறுப்புகள் எடுத்துச்சென்ற பெட்டியை பிடித்துக் கொண்டு கதறி அழுதது பார்ப்பவர்களுக்கும் கண்ணீரை வரவழைத்தது.

இது குறித்து மணிகண்டனின் தந்தை கூறும்போது, ”என் மகன் இறந்தும் எட்டு பேருக்கு உயிர் கொடுத்து உள்ளார். அவர் இல்லாமல் மிகுந்த வேதனையில் வாடுகிறோம். குடும்பத்தை வழி நடத்தி வந்த மகன் உயிரிழந்ததால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கிறோம். ஆகையால், அரசு உதவி செய்ய வேண்டும்” என கோரிக்கையை வைத்துள்ளார்.

இந்நிலையில் மணிகண்டனின் குடும்பத்திற்கு வாழ்த்து தெரிவித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “ஊரக பகுதிகளிலும் 'உடல்உறுப்பு தானம்' பெருமை அளிக்கிறது. தியாகம் செய்த பெற்றோருக்கு நன்றி. உறுதுணையாக இருந்த மருத்துவர்களுக்கு பாராட்டுகள்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:25 வயது பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்: 6 பேருக்கு கிடைத்த மறுவாழ்வு

ABOUT THE AUTHOR

...view details