ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர் சந்திப்பு சேலம்: சேலத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம் ஒன்றில், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார்.
இந்த கூட்டத்தில் பேசிய அவர், "எடப்பாடி பழனிசாமி பொய்யாக அவிழ்த்துவிடுகிறார். நேற்று அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, பன்னீர்செல்வம் 1989-இல் போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியில் நடந்த தேர்தலில் ஜானகி அணியின் சார்பாக போட்டியிட்ட நடிகை நிர்மலாவிற்கு சீஃப் ஏஜண்டாகாக செயல்பட்டதாக குற்றம் சாட்டினார்.
அப்படி நான், நடிகை நிர்மலாவிற்கு சீஃப் ஏஜண்டாகாக செயல்பட்டதை எடப்பாடி பழனிசாமி நிரூபித்துக் காண்பித்தால், நான் அரசியலில் இருந்து விலகிக் கொள்கிறேன். ஆனால் நிரூபிக்க முடியவில்லை என்றால், நீங்கள் அரசியலில் இருந்து விலகிக்கொள்ளத் தயாரா?" என்றார்.
இதனைத் தொடர்ந்து, அவர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அதிமுகவின் சொத்துக்கள் விற்கப்படுவதாக சமூக வலைத்தளங்களில் அறிவிப்புகள் வெளியாகி வருவதாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், "இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரவில்லை. அப்படி அதிமுக சொத்துக்கள் விற்கப்பட்டால், அது தவறு. எம்ஜிஆர் தொண்டர்களுக்காக உருவாக்கிய இயக்கம், ஒவ்வொரு பைசாவும் அதிமுக தொண்டர்களுக்குத்தான் சேரும்” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்கள், எடப்பாடி பழனிசாமி குறித்த ரகசியம் எப்போது வெளியிடுவீர்கள் என்று கேட்டதற்கு, "அது ரகசியம், எப்படி வெளியில் சொல்ல முடியும்? ரகசியம் சொல்ல வேண்டிய நேரத்தில் சொல்லப்படும்" என்றார்.
மேலும், எடப்பாடி பழனிசாமி உங்களை ஏற்றுக் கொண்டால் மீண்டும் அதிமுகவில் இணைய வாய்ப்புள்ளதா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, "அந்த இழிவு நிலைக்கு பன்னீர்செல்வம் செல்லமாட்டான். இந்த இயக்கத்தைப் படுகுழியில் தள்ளிய பழனிசாமியை எந்த ஒரு கால கட்டத்திலும் தலைமை இடத்திற்கு ஏற்றுக்கொள்ள மாட்டோம்" என்று கூறினார்.
இதையும் படிங்க:படிப்பதற்கு டார்கெட் வைக்கசொன்னால் குடிப்பதற்கு டார்கெட் வைக்கிறார்கள் - நடிகை கஸ்தூரி