சேலம்:அதிமுகவில் நிலவிய ஒற்றைத்தலைமை விவகாரத்தில் ஈபிஎஸ் - ஓபிஎஸ் என இரு தரப்பாக ஆதரவாளர்கள் பிரிந்தனர். தொடர்ந்து இரு தரப்பும் கட்சிக்கு உரிமை கொண்டாடி நீதிமன்றத்தையும், தேர்தல் ஆணையத்தையும் நாடினர். ஆனால் நீதிமன்றத்திலும், தேர்தல் ஆணையத்திலும் தனக்கு ஆதரவான முடிவுகள் கிடைக்காததால் அப்செட்டான ஓபிஎஸ், மத்தியில் இருக்கும் ஆதரவால் கட்சியை மீண்டும் பிடித்து பிட முடியும் எனக் கருதி வந்தார்.
ஆனால், அதிமுக - பாஜக கூட்டணி விவகாரத்தில் ஏற்பட்ட மோதல் கர்நாடகத்தேர்தலின்போது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் சுமுகமாகி தேர்தல் ஆணையத்திலும் எடப்பாடி பழனிசாமிக்கு கிரீன் சிக்னல் கிடைத்தது. இதனால் மத்தியில் இருந்த ஆதரவின் மீது ஓ.பன்னீர்செல்வத்திற்கு இருந்த நம்பிக்கை மங்கிப்போனது.
இதனையடுத்து டிடிவி தினகரனை சந்தித்த ஓபிஎஸ் தென் மாவட்டங்களில் தன் சமூகத்திற்கு என இருக்கும் வாக்குகளை ஒன்று சேர்ப்பதற்காக, டிடிவி தினகரனுடன் இணைந்தார். மேலும் எதிர்தரப்பு பலமாக உள்ள பகுதிகளில் தன்னுடைய பலத்தைக் காட்டுவதற்காக கொங்கு பகுதிகளில் தொடர்ந்து கூட்டங்களை நடத்தி தொண்டர்கள் மத்தியில் தன் பலத்தைக் காட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்.
அந்த வகையில் ஓ.பன்னீர்செல்வம் அணியினரின் சார்பில் மாநகர மாவட்டக் கழக செயல் வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தலைமையில் இன்று சேலத்தில் நடைபெறுகிறது. அதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று, ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் திருமண மண்டபத்தின் முன்பு பதாகைகள் மற்றும் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தது.
மேலும் 100 அடி தூரத்திற்கு அதிமுக கொடிகளை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சாலையின் இருபுறமும் நட்டு வைத்திருந்தனர். இந்த நிலையில் இதனை அறிந்த எடப்பாடி பழனிசாமி அணியினர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம் தலைமையில் ஐம்பதுக்கு மேற்பட்டோர் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் திருமண மண்டபத்தின் முன்பு குவிந்து, ஓபிஎஸ் தரப்பினர் அதிமுகவின் கொடி, சின்னத்தினை பயன்படுத்தக்கூடாது என்று கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.