சேலம்: ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் பெய்த கனமழை காரணமாக வெங்காய உற்பத்தி பாதிக்கப்பட்டு, நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளது.
சேலம் கூட்டுறவு சிறப்பு அங்காடியில் பெரிய வெங்காய விற்பனை தொடக்கம்!
சேலம் மாவட்டத்தில் உள்ள பண்ணை பசுமை கூட்டுறவு சிறப்பு அங்காடியில் தமிழ்நாடு அரசு அறிவித்த குறைந்த விலையில், பெரிய வெங்காய விற்பனை தொடங்கியதையடுத்து, ஏராளமானோர் நீண்ட வரிசையில் காத்திருந்து வெங்காயத்தை வாங்கிச் சென்றனர்.
இதையடுத்து பொதுமக்களின் வசதிக்காக பண்ணை பசுமை கூட்டுறவு சிறப்பு அங்காடியில் ஒரு கிலோ வெங்காயம் 45 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது. அதன்படி, சேலம் மாவட்டம் பள்ளப்பட்டியில் செயல்பட்டு வரும் பண்ணைப் பசுமை நுகா்வோா் கூட்டுறவு சிறப்பு அங்காடியில் குறைந்த விலையில் பெரிய வெங்காயம் விற்பனை செய்யப்படுவது இன்று (அக்டோபர் 27) தொடங்கியது.
சேலத்தில் இரண்டு டன் அளவில் இறக்குமதி செய்யப்பட்ட பெரிய வெங்காயம், இன்று காலை முதல் விற்பனை செய்யப்பட்டு வருவதாக கூட்டுறவு துறை அலுவலர்கள் தெரிவித்தனர். பள்ளப்பட்டி, அதன் சுற்றுவட்டாரப் பகுதியைச் சோ்ந்தவா்கள் பெருமளவில் பண்ணை பசுமை நுகா்வோா் கூட்டுறவு சிறப்பு அங்காடியில் நீண்ட வரிசையில் நின்று வெங்காயத்தை வாங்கிச் செல்கின்றனா்.