சேலம் தாதகாப்பட்டியைச் சேர்ந்தவர் செல்வம். இவர் பழைய பேருந்து நிலையம் அருகில் பழ வியாபாரம் செய்து வந்தார். இந்நிலையில், இவர் நேற்று (மே-28) இரவு சீலநாயக்கன்பட்டி அருகே நின்றுகொண்டிருந்த போது, 60 வயது மதிக்கத்தக்க ஒருவர் செல்வத்தை கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, ரத்த வெள்ளத்தில் கிடந்த செல்வத்தை அப்பகுதி மக்கள் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட செல்வம் சிறிது நேரத்திலேயே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்தக் கொலை சம்பவம் குறித்து அன்னதானப்பட்டி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது நள்ளிரவு நேரத்தில், அன்னதானப்பட்டி பகுதியில் காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது, சீலநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த துரைராஜ் என்பவர் மதுபோதையில் வந்துகொண்டிருந்தார்.
அவரை சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர். அப்போது, துரைராஜ் என்பவர் தாமாக முன்வந்து ”பழ வியாபாரி செல்வத்தை தாயம் விளையாடும் போது ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக நான்தான் கொலை செய்தேன்” என்று ஒப்புக்கொண்டார். பின்னர், அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்ற காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:வீடு புகுந்து நகைப்பறிப்பில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது!