சேலம்:கடந்த சில மாதங்களாக தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதிலும் மழை காரணமாக தக்காளி விளைச்சல் குறைந்துள்ளது. ஆகையால், தமிழ்நாட்டின் அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டின் நகரங்களுக்கு அன்றாடம் வரும் தக்காளி வரத்தும் வெகுவாக குறைந்து உள்ளது.
இதனால் தக்காளியின் விலை நாளுக்கு நாள் கடுமையாக உயர்ந்த வண்ணம் உள்ளது. இதன் காரணமாக ஒரு கிலோ தக்காளியின் விலை 100 ரூபாயிலிருந்து 140 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் ஏழை, எளிய குடும்பத்தினர் தக்காளி வாங்கி பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், இனி வரும் வாரத்தில் ஒரு கிலோ தக்காளியின் விலை மேலும் உயரும் என்று தக்காளி வியாபாரிகள் தெரிவித்து வருகின்றனர். அதனால் தமிழ்நாடு முழுவதும் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்காக பல்வேறு பகுதிகளில் கூட்டுறவு சங்க பண்டக சாலைகளில் குறைந்த விலைக்கு தக்காளி விற்பனை செய்யப்படுகிறது. ஆனாலும் பொது மக்களுக்கு இந்த திட்டம் என்பது முழுமையாக பயன் அளிக்காத வகையில் உள்ளது என்றே சமூக ஆர்வலர்களால் குற்றம் சாட்டப்படுகிறது.
ஒரு நபருக்கு ஒரு கிலோ வீதம் தக்காளி விற்பனை செய்யப்படுவதாலும், தக்காளி விரைந்து விற்றுத் தீர்ந்து விடுவதாலும் பெரும்பாலான மக்கள் தக்காளியை கூட்டுறவு பண்டக சாலைகளில் வாங்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். இந்த நிலையில், சேலம் கோட்டை பகுதியில் உள்ள ஒரு ஹெல்மெட் கடையில் ‘ஒரு ஹெல்மெட் வாங்கினால் ஒரு கிலோ தக்காளி இலவசம்’ என்ற அறிவிப்பு கடந்த சில நாட்களாக வெளியிடப்பட்டது.