நாம் அன்றாடம் பயன்படுத்தும் வீட்டு உபயோகப் பொருள்களில் உடலுடன் சேர்த்து மனத்திற்கும் நன்மை அளிக்கக்கூடியவை ஏராளம். நவீனமயமாதலின் விளைவாக இந்த வீட்டு உபயோகப் பொருள்கள் பரிணாம வளர்ச்சி அடைந்துவரும் நிலையில், பழமையும் பாரம்பரியமும் மாறாத சில பொருள்கள், அவற்றின் தனித்தன்மை காரணமாக மக்களால் விரும்பி உபயோகப்படுத்தப்பட்டே வருகின்றன.
அப்படி நாம் இன்றளவும் விரும்பி உபயோகிக்கும் பொருள்களில் ஒன்று கயிற்றுக் கட்டில். வெயில் நிரம்பிய மதிய வேளையில் மனத்திற்கு இதமான மர நிழல், நிழலின் அடியில் அமர ஒரு கயிற்றுக் கட்டில், மனத்தை ஆசுவாசப்படுத்தும் காற்று, இதைவிட அருமையாக எவ்வாறு ஓய்வுப்பொழுதை நாம் கழிக்க முடியும்?
கிராமத்து மக்களுக்கு பெரும் வரப்பிரசாதமாக விளங்கும் இந்தக் கயிற்றுக் கட்டிலை விரும்பி உபயோகிக்காதவர்கள் எவரும் இருக்க முடியாது. இத்தகைய கயிற்றுக் கட்டில்களைச் செய்யும் பணியினை முழுவீச்சில் செய்துவருகின்றனர் சேலம் மாவட்டம், ஓமலூர் பகுதி மக்கள்.
வடநாட்டு யுக்தியில் புதிய முறையில் கயிற்றுக் கட்டில்களைப் பின்னுவது இப்பகுதியில் தயாரிக்கப்படும் கயிற்றுக் கட்டில்களின் சிறப்பம்சம். பொதுவாக மரச் சட்டகம் அமைத்த பின்பு கயிற்றுக் கட்டில்களில் கயிறு பின்னுவார்கள். இதனால், நாள்கள் செல்ல செல்ல இறுக்கம் குறைந்து, தளர்வு ஏற்பட்டு, ஓய்வெடுக்க முடியாதபடி இது அசௌகரியத்தை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது. இதற்கு வெற்றிகரமாகத் தீர்வு கண்டுள்ளனர் ஓமலூர் பகுதி மக்கள்.
கயிற்றுக் கட்டில் பின்னும் தொழிலாளி மேலும், கயிற்றைக் கட்டுவதற்குப் பதிலாக, கைத்தறி நெசவு செய்வதுபோல் பின்னி, வடிவமைத்து, அவற்றை அழகூட்டி கயிறு பின்னுவதில் என்னென்ன குறைபாடுகள் இருந்தனவோ அனைத்தையும் சரி கட்டியுள்ளனர்.
இது குறித்து கட்டில் செய்து விற்கும் ஸ்ரீரங்கன் என்பவரை அணுகி விசாரித்தபோது பல ஆச்சர்யமூட்டும் தகவல்களை அவர் பகிர்ந்தார். இவ்வகைக் கட்டில்களை மருத்துவர்களே பரிந்துரைக்கின்றனர் என்றும், இதனால் மனத்திற்கும் உடலுக்கும் நிறைய நன்மைகள் உண்டென்றும் கூறினார் ஸ்ரீரங்கன். குறிப்பாக பித்தம் தொடர்பான பிரச்னைகள் இக்கட்டிலில் படுத்துறங்குவதால் நீங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.
”இக்கட்டிலை உபயோகப்படுத்தும்போது மேற்பகுதியிலும், அடிப்பகுதியிலும் ஒரே காற்று நிலை இருக்கும். இது உடலுக்கு குளிர்ச்சியளிப்பதோடு, ஆழ்ந்த உறக்கத்தையும் வரவழைக்கும். வழக்கமாக கயிறு பின்னுதல் இரண்டு மணி நேரத்தில் முடியும் என்றால் இந்தக் கட்டில்களைப் பின்னி முடிக்க எட்டு மணி நேரம் எடுக்கும். ஆனால் நினைத்த வண்ணங்களிலும் வடிவங்களிலும் இவற்றை வாடிக்கையாளர்கள் கேட்கும் வகையில் செய்ய முடியும்” என்கிறார் ஸ்ரீரங்கன்.
ஓமலூர் கயிற்றுக் கட்டில்கள் இங்கு தயாரிக்கப்படுபவற்றில் நூற்றுக்கு 95 விழுக்காடு கட்டில்கள் விற்று விடுகின்றனவாம், ஐந்து, ஆறு தொழிலாளர்கள் சேர்ந்து கொடுக்கும் உழைப்பே ஒரு கட்டில் ஆகிறது. பெரிதான லாபம் இல்லை என்றாலும் உழைப்புக்கேற்ற கூலியை இவை பெற்றுத் தருகிறது எனவும் இந்தக் கட்டில் தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
”முறையான அமைப்புகளோ, சங்கங்களோ எங்களுக்கு இல்லை. எந்த வகை அரசு சார்ந்த மானியங்களும் பெற வழியில்லை என்றாலும் சேவை நோக்கத்தோடு இதனை நாங்கள் செய்துவருகிறோம். ஒரு வேளை தமிழ்நாடு அரசு இதனை அறிந்து கடன் திட்ட உதவிகளைச் செய்தால் சற்று நலமாக இருக்கும்” என்றும் ஸ்ரீரங்கன் தெரிவித்தார்.
ஓமலூர் கயிற்றுக் கட்டில்கள் தொடர்ந்து இது குறித்து கட்டில் பின்னும் தொழிலாளியான பெரியசாமி கூறுகையில், ”இதற்காக நான் எங்கும் சென்று தனிப்பயிற்சி எடுக்கவில்லை, நானே முயன்று இதனைக் கற்றுள்ளேன். இதற்கு முன் நான் நெசவுத் தொழில் செய்துவந்தேன். பட்டு வடிவமைப்புக்கு பயன்படுத்தப்படும் அதே யுக்தியைத்தான் இக்கட்டில் செய்வதிலும் புகுத்தியுள்ளோம். வட இந்திய மாநிலங்களில், குறிப்பாக பஞ்சாப் மாநிலத்தில் இந்த முறை மிகப் பிரபலம்.
ஆனால் அதற்கும் இதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. எல்லாம் மணக்கணக்குதான். நம் பெயரைக்கூட இந்த முறையில் வடிவமைக்கலாம். வாடிக்கையாளர்களின் விருப்பங்களும் நம் கற்பனையும் இணைந்துதான் இக்கட்டில் உருவம் பெறுகிறது. இந்தக் கட்டிலின் தரம் விலைக்கு ஏற்றார்போல் இருக்கும். அதிகபட்சம் 4500 வரை மட்டுமே வரும், ஆனால் 20 ஆண்டுகளுக்கு உழைக்கும். பராமரிப்பு செலவும் குறைவு. இவையெல்லாம் இக்கட்டிலின் மதிப்புக் கூட்டு அம்சங்கள்” என்கிறார் பெரியசாமி.
நம்மால் இவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட முடியவில்லை என்றாலும், முயன்ற அளவு இவர்களின் முயற்சியை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்ப்போம். இந்தக் கட்டில்களின் சிறப்பம்சங்களையும் எடுத்துரைப்போம்.