கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்திடும் வகையில், ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு புறக்கடை கோழி வளர்ப்புத் திட்டம், தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனை மேம்படுத்தும் வகையில், நகர்ப்புற ஏழை மக்களுக்கும் இந்தத் திட்டத்தை விரிவுபடுத்தி, வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டார்.
அதனடிப்படையில், நகர்ப்புற ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு புறக்கடை கோழி வளர்ப்புத் திட்டம் சேலம் மாவட்டம் ஓமலூரில் இன்று தொடங்கப்பட்டது. கருப்பூர் பேரூராட்சி நகரக்கழகச் செயலாளர் கோவிந்தசாமி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், கருப்பூர், வெள்ளாளப்பட்டி, சிக்கனம்பட்டி, காமலாபுரம் பகுதியைச் சேர்ந்த 391 பெண்களுக்கு தலா 25 கோழிக் குஞ்சுகள் வீதம் புறக்கடை கோழி வளர்ப்புத் திட்டத்தினை ஓமலூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.வெற்றிவேல் தொடங்கி வைத்தார்.