சேலம்: சேலம் பழைய சூரமங்கலம் பகுதிக்குட்பட்ட சுடுகாட்டில் கிட்டத்தட்ட, 12 வருடங்களுக்கு மேலாக தகன மேடை இல்லாமல் அப்பகுதி மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக மழைக்காலங்களில் பிணம் எரிக்க முடியாமல் அவதியடைகின்றனர்.
பொது சுடுகாடு என்பதால், வசதிகள் ஏற்படுத்தித் தர பல அலுவலர்களைச் சந்திக்க வேண்டியுள்ளது. மேலும், அப்படி முயன்றாலும் எந்தவித முன்னேற்றங்களும் ஏற்படவில்லை எனக் கவலை தெரிவிக்கின்றனர்.
12 ஆண்டுகளுக்கும் மேலாக தகன மேடை இல்லாது அவதியுறும் சூரமங்கலம் மக்கள் இதுகுறித்து இறுதிச் சடங்கு செய்யும் சாம்புவன் கூறுகையில், "பிணம் எரிப்பதற்கு அடிப்படையாக தேவைப்படுவது தகன மேடை. ஆனால், இங்கு வெறும் தரையில் குழி வெட்டி எரிக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. மழை பெய்யும் நிலம் வந்தால், மிகவும் கஷ்டப்பட்டு எரிக்கவேண்டியதாக உள்ளது.
பிணம் எரிக்கும்போது பலமுறை பாதியில் அணைந்து போயிருக்கிறது. அருகிலுள்ள கட்டடத்தை தகன மேடையாக பயன்படுத்த பலமுறை கேட்டும் ஏமாற்றமே மிஞ்சியது. சொந்த செலவில் போட்ட கூரையை சில பேர் திருடி விற்பதால் அதையும் செய்ய முடியாத நிலை உள்ளது" என்றார்.
இந்நிலை இங்கு மட்டும் இல்லை, பழைய சூரமங்கலம், சோளம்பள்ளம், அரியாகவுண்டம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சுடுகாட்டிலும் கூட தகன மேடை வசதி இல்லை.
இதை உரியவர்கள் கவனத்தில் கொண்டு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சுடுகாட்டில் பணி செய்யும் பணியாளர்கள், பொது மக்களின் கோரிக்கையாக உள்ளது.
இதையும் படிங்க:கால்வாய் செல்லும் வழித்தடத்தில் சடலங்களை எடுத்துச் செல்லும் பட்டியலின மக்கள்!