தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’தாலிக்கு தங்கம் முதல் காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு வரை’ - 'அம்மா' பெயரைச் சொல்லி ஓபிஎஸ் பரப்புரை - ஓ பன்னீர்செல்வம் பரப்புரை

சேலம்: காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிட திமுக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியுள்ளார்.

சேலத்தில் ஓ பன்னீர்செல்வம் பரப்புரை
சேலத்தில் ஓ பன்னீர்செல்வம் பரப்புரை

By

Published : Mar 25, 2021, 1:02 PM IST

சேலம், தாதகாபட்டி பகுதியில் நேற்று (மார்ச்.24) நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக கூட்டணி வேட்பாளர்களான ஜி.வெங்கடாஜலம் (சேலம் வடக்கு), பாலசுப்பிரமணியன் (சேலம் தெற்கு), வீரபாண்டி (ராஜாமுத்து), கு.சித்ரா (ஏற்காடு), ஏ.பி.ஜெயசங்கரன் (ஆத்தூர்), நல்லதம்பி (கெங்கவல்லி) ஆகிய அதிமுக வேட்பாளர்கள், பாமக வேட்பாளர் இரா.அருள் (சேலம் மேற்கு) ஆகியோரை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய அவர், "தமிழ்நாட்டில் தொலைநோக்குத் திட்டங்கள் மூலம் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தியவர் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா. 2011ஆம் ஆண்டில் தொலைநோக்குத் திட்ட ஆவணம் வெளியிட்டு ”2023ஆம் ஆண்டுக்குள் அனைத்து ஏழை, எளிய மக்களுக்கும் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும்” என அறிவித்தார்.

அதன்படி இதுவரை 6.5 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன. மீதமுள்ள அனைவருக்கும் வரும் 2023ஆம் ஆண்டுக்குள் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும். பெண்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. ஏழை பெண்களுக்கு திருமண நிதியுதவித் திட்டத்தின் கீழ் 25,000 ரூபாயும், பட்டதாரிப் பெண்களுக்கு 50,000 ரூபாயும் வழங்கப்பட்டு வருகிறது. மகளிருக்கு பேறுகால நிதியுதவித் திட்டத்தில் 18,000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. தாலிக்கு தங்கம் நான்கு கிராம் என்பதை எட்டு கிராமாக உயர்த்தி முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி வழங்கி வருகிறார்.

2011ஆம் ஆண்டுக்கு முன்பு திமுக ஆட்சியில் ஐந்து ஆண்டுகளில் 45,000 கோடி ரூபாய் தொழில் முதலீடு பெறப்பட்டது. தற்போதைய அதிமுக அரசு கடந்த 10 ஆண்டுகளில் 6.87 லட்சம் கோடி ரூபாய் தொழில் முதலீடுகளை ஈர்த்துள்ளது.

19 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கித் தந்துள்ளோம். விவசாயிகளுக்கு மானிய விலையில் உரம், விதை ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன. நெல் உற்பத்தியில் நாட்டிலேயே தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது. உணவு உற்பத்திக்காக மத்திய அரசின் விருதுகளை தொடர்ந்து பெற்றுவருகிறது.

சேலத்தில் ஓ பன்னீர்செல்வம் பரப்புரை
தமிழ்நாட்டின் மொத்த வருவாயான 1.20 லட்சம் கோடி ரூபாயில், கல்வித்துறைக்கு 35 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கி, கல்வித்தரம் மேம்படுத்தப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பிய சமயத்தில், அப்போதைய முதலமைச்சராக இருந்த கருணாநிதி ’கையளவு கொடுப்போம்’ என்று கூறினார்.

அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறியதுபோல ஏழை பெண்களுக்கான திருமண நிதியுதவித் திட்டம் 25,000 ரூபாய் என்பதை 35,000 ரூபாயாக உயர்த்தி தருவோம். கரோனா காலத்தில் நாங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டதை பிரதமர் மோடி பாராட்டியிருக்கிறார்.

திமுக, மத்தியிலும் மாநிலத்திலும் தொடர்ந்து 16 ஆண்டு காலம் ஆட்சி வகித்த நிலையில் தமிழ்நாட்டிற்கு எந்தவித உருப்படியான திட்டத்தையும் கொண்டு வரவில்லை. காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருக்கும்போது ஒரு அரசு மருத்துவக் கல்லூரி தொடங்க அனுமதி பெறுவது என்பதே கஷ்டமான சூழ்நிலையாக இருக்கும். ஆனால் மத்திய பாஜக அரசு, ஒரே ஆண்டில் தமிழ்நாட்டில் 11 அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்க அனுமதி அளித்துள்ளது. அதை மாநில அரசு நிறைவேற்றி வருகிறது.

தமிழ்நாட்டின் வாழ்வாதாரப் பிரச்னையான காவிரிப் பிரச்னையில் 17 ஆண்டு கால போராட்டத்திற்குப் பிறகு கடந்த 2007ஆம் ஆண்டில் காவிரி நடுவர் மன்றத்தில் இறுதித் தீர்ப்பு பெறப்பட்டது. அப்போது மாநிலத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பில் இருந்தது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருந்தது. அவர்கள் நினைத்திருந்தால் உடனே காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டிருக்க முடியும். ஆனால் காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிட திமுக எதையும் செய்யவில்லை. அப்போது அதிமுக எதிர்க்கட்சியாக இருந்தது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, புதுடெல்லி சென்று பிரமதரிடம் முறையிட்டார். ஆனால் எதுவும் நடக்கவில்லை.

அதனைத்தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்தி காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிட நடவடிக்கை எடுத்தார். காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு பெற்ற நிலையில் ஏழு ஆண்டுகள் கழித்து அரசிதழில் வெளியானது. மக்களின் உண்மையான தலைவராக இருந்து அரசிதழில் காவிரி இறுதி தீர்ப்பை வெளியிட நடவடிக்கை எடுத்தவர் ஜெயலலிதா.

இலங்கைத் தமிழர்கள் இனப்படுகொலை தொடர்பாக, தமிழ்நாடு சட்டப்பேரவையில் சர்வதேச நீதி விசாரணை நடத்தி ராஜபட்ச மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றிய துணிச்சல் மிக்கத் தலைவர் ஜெயலலிதா. சிறுபான்மையின மக்கள் தற்போதுஅமைதியாக வாழ்ந்து வருகின்றனர்.

சிறுபான்மை மக்களுக்கு அதிமுக அரசு பாதுகாப்பாக உள்ளது. சாதி, மத பிரச்னை இல்லாமல் தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக திகழ்ந்து வருகிறது. நீட் தேர்வுக்கு கையெழுத்து போட்டது திமுகதான். நீட் தேர்வு காரணமாக அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படிக்காத நிலை இருந்தது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 விழுக்காடு உள் இடஒதுக்கீடு கொண்டு வந்து 435 மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர்.

திமுக தலைவர் ஸ்டாலின் டீக்கடையில் உட்கார்ந்து தேநீர் அருந்துகிறார். நான் டீக்கடை நடத்தியவன். நீங்கள் என்ன செய்தாலும் எதுவும் நடக்காது. தேர்தலில் தீர்ப்பு வழங்கும் எஜமான்கள், நீதிபதிகளாக மக்கள் உள்ளனர். தமிழ்நாட்டில் 30 ஆண்டுகள் ஆட்சி நடத்திய அதிமுகவுக்கு மக்கள் வழங்கிய தீர்ப்பே இதற்கு காரணமாகும். 2021ஆம் ஆண்டு தேர்தலில் ஆண்ட கட்சி மீண்டும் ஆளுகிற நிலையை அடைய அதிமுகவுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க:மோடியை எதிர்க்கக்கூடிய ஒரே தலைவர் ஸ்டாலின்தான்- உதயநிதி

ABOUT THE AUTHOR

...view details