சேலம்: அதிக சத்துள்ள பாலுக்கு கொள்முதல் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ள அறிவிப்பு ஒரு ஏமாற்று வேலையாகத் தெரிகிறது என்பதால், அரசைக் கண்டித்து மாநிலம் தழுவிய அளவில் ஆவின் உள்ளிட்ட பால் கொள்முதல் நிலையங்கள் முன்பு முக்காடு போட்டு போராட்டம் நடத்த உள்ளதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்க பால் உற்பத்தியாளர் பிரிவின் மாநிலச் செயலாளர் பெரியண்ணன் சேலத்தில் தெரிவித்தார்.
இது குறித்து பெரியண்ணன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “பசும்பால் கொள்முதல் விலையை ரூபாய் 42 ஆகவும், எருமைப்பால் கொள்முதல் விலையை ரூபாய் 55 ஆகவும் உயர்த்தி வழங்க வேண்டும் என்பது பால் உற்பத்தியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கை.
இந்தக் கோரிக்கையை அரசு நிறைவேற்றாவிட்டால், திருச்சியில் நடந்த செயற்குழு கூட்டத்தின் அடிப்படையில் விரைவில் ஆவின் கூட்டுறவு பால் பண்ணைகள் முன்பு முக்காடு அணிந்து போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். மற்ற மாநிலங்களில் ஒரு லிட்டர் பால் கொள்முதல் விலை 40 ரூபாய்க்கு மேல் கொள்முதல் செய்யப்படுகிறது. ஆனால், தமிழகத்தில் ஒரு லிட்டர் பால் கொள்முதல் விலை 32 ரூபாய் மட்டுமே.
அதிக சத்துள்ள பாலுக்கு ஒரு ரூபாய் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்குவதாக அரசு அறிவித்துள்ளது ஒரு ஏமாற்று வேலை.
தமிழ்நாட்டில் பாலுக்கான கொள்முதல் விலையை உயர்த்தாதது தனியார் பால் நிறுவனங்களுக்கு துணைபோகும் செயலாகும்.
கொள்முதல் விலை குறைந்த நிலையில் இருப்பதால், எங்களுக்கு ஆண்டுக்கு 545 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.