சேலம் மாவட்டம், சீலநாயக்கன்பட்டி பகுதியில் வசித்து வந்தவர் பிரசன் குமார் மண்டல். வடமாநில இளைஞரான இவர், பனமரத்துப்பட்டி பகுதியில் உள்ள கிரானைட் தொழிற்சாலை ஒன்றில் கூலி வேலை செய்து வந்தார்.
இதனிடையே சீலநாயக்கன்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி சுந்தரம் என்பவருடன் நட்பு ஏற்பட்டு, பிரசன் குமார் அவருடன் பழகி வந்துள்ளார். தொடர்ந்து, கடந்த 11ஆம் தேதி இரவு மதுபோதையில் இருந்த சுந்தரம், பிரசன் குமாரை கட்டையால் கடுமையாகத் தாக்கியுள்ளார்.
இதில் படுகாயமடைந்த பிரசன் குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற அன்னதானப்பட்டி காவல் துறையினர், பிரசன் குமாரின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, சுந்தரத்தைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், தனது மனைவியிடம் தகாத முறையில் பிரசன் குமார் நடந்து கொள்ள முயன்றதால் அவரைத் தாக்கியதாகவும், அதில் எதிர்பாராதவிதமாக அவர் உயிரிழந்து விட்டதாகவும் சுந்தரம் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:கிணறு அருகே மது அருந்திக் கொண்டிருந்த இளைஞர் பிணமாக மீட்பு!