சேலம்:ஹோலி பண்டிகை வரும் மார்ச் 8ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்கள், ரயில்களில் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு புறப்பட்டு செல்கின்றனர். அந்த வகையில் சேலத்திலும் வடமாநில தொழிலாளர்கள் ஏராளமானோர் ரயில்களுக்காக காத்திருந்தனர். கேரள மாநிலம் எர்ணாகுளத்திலிருந்து , பீகார் மாநிலம் பரோனி நோக்கி செல்லும் ரப்திசாகர் எக்ஸ்பிரஸ் இன்று (மார்ச் 04) மாலை சேலம் ரயில் நிலையத்திற்கு வந்தது. அப்போது முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் அன்ரிசர்வ்டு டிக்கெட் உடன் ஏறியிருந்தனர்.
இதனால் முறையான பயணச்சீட்டுடன் வந்தவர்கள் ரயிலில் ஏற முடியாமலும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கைகளில் அமர முடியாமலும் அவதிப்பட்டனர். ரயில்வே போலீசார் மற்றும் அதிகாரிகளிடம் புகார் அளித்த பயணிகள், அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினர். இதனையடுத்து பயணச்சீட்டு பரிசோதகர்கள் மற்றும் ரயில்வே பாதுகாப்பு போலீசார் மற்றும் ரயில் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர்.
முன்பதிவு செய்யாமல் பயணித்த சுமார் 140-க்கும் மேற்பட்டவர்களை ரயிலில் இருந்து கீழே இறக்கிவிட்டனர். இதனால் சுமார் அரை மணி நேர தாமதத்திற்குப் பின் அந்த ரயில் புறப்பட்டு சென்றது. தொடர்ந்து, ஈரோடு-ஜோலார்பேட்டை பயணிகள் ரயிலில் வடமாநில தொழிலாளர்கள் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டனர். இதனிடையே ஆலப்புழா-தன்பாத் ரயில் சனிக்கிழமை மாலை 3 மணி அளவில் சேலம் ரயில் நிலையம் வந்தது.